

மின்வாரியத் திட்டப்பணிகள் குறித்த டெண்டர் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மின்வாரி யத்தின் மீதான முறைகேடு புகார்களைக் குறைக்க இந்த வெளிப்படைத் தன்மையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மின்வாரியத்தில் ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வணிகம், மின் உற்பத்தி, மின் கொள்முதல் போன்றவற்றுக்காக, நிதி கையாளப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதனால் மின்வாரியத்தின் மீதான நன்மதிப்பு பாதிக்கப் படுவதாக, அதிகாரிகள் கவலை யடைந்துள்ளனர். குறிப்பாக மின்சாரக் கொள்முதல், மின் உற்பத்தி திட்டம், மின் நிலைய பராமரிப்புப் பணி, மின் சாதனங்கள் கொள்முதல் போன்ற பல பணிகளில், டெண்டர் விடப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதன் முடிவுகளை வெளியே தெரியாமல் ரகசியம் காப்பதால், முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளதாக புகார்கள் வருகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, டெண்டர் விவரங்களை இணைய தளம் மூலம் வெளிப்படையாகத் தெரிவிக்க மின்வாரிய புதிய தலைவர் சாய்குமார் முடிவு செய்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் மின்வாரிய டெண்டர் முடிவுகள் இணையதளங்களில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.
முதற்கட்டமாக தற்போது டெண்டர் முடிந்துள்ள குந்தா நீர் மின் நிலையப் பணிகளின் பணி விவரம், தமிழக மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குந்தா நீர் மின் நிலையத்தின் அங்கமாக அவலாஞ்சி அணை மற்றும் க்ளென்மோர்கன் அணை ஆகியவற்றின் பரா மரிப்புப் பணிகள், இரண்டு தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் விவரத்துடன், அவை குறிப்பிட்ட டெண்டர் தொகை, தேர்வான நிறுவனத்தின் பெயர், தகுதி நீக்கத்துக்கான காரணங்கள் குறித்து, இந்த தகவலில் விரிவாகக் கூறப்பட்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் காலங்களில் தனியார் மின் கொள்முதல், நிலக்கரி கொள்முதல், பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்தல் போன்றவை குறித்த தகவலையும் மின்வாரியம் வெளிப்படையாகத் தெரிவிக்கும் என்று அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.