Published : 25 Dec 2014 12:51 PM
Last Updated : 25 Dec 2014 12:51 PM

தனியாருக்கு மின் பகிர்மான உரிமை: மின்சார சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்- ஆண்டுதோறும் கட்டாயமாகிறது கட்டண உயர்வு

சென்னை மின் பகிர்மானத்தில் தனியாருக்கு உரிய அதிகாரம் வழங்கவும், ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கவும் மின்சார சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவுள்ளது.



இந்திய மின்சார சட்டம் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டு, பின்னர் மின்சார விநியோக சட்டம் என்ற பெயரில் 1948-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இதன்பிறகு 1998-ம் ஆண்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இச்சட்டங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முக்கிய திருத்தங்களுடன் மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, 2004, 2007-ம் ஆண்டுகளில் சட்டம் திருத்தப்பட்டது.

இந்நிலையில் மின்சார சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் கடந்த 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மின் துறை சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மின் துறையை தனியார் மயமாக்கும் முதற்கட்ட முயற்சியாக இதைக் கருதுகின்றனர்.

திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: மின்சார சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் கொண்டு வர, கடந்த 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு, அதன் மீது மத்திய மின்சார ஆணையத் தலைவர் தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்தது. பின்னர் திருத்தங்கள் குறித்து மாநில அரசுகள், மின் துறை நிறுவனத்தினர், நுகர்வோர் மற்றும் துறை சார்ந்தோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

இதன்படி ஐந்து வகை திருத்தங்கள் செய்யப்படுகின்றன. முதலாவதாக மத்திய மின் தொகுப்பு தடத்தின் ஸ்திரத்தன்மையை காக்கும் பொருட்டு, மின் பகிர்மான மையங்கள், மின் தொகுப்பு மையங்களின் உத்தரவுகளை தொழில்நுட்பரீதியாக மீறும் மின் நிறுவனங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத் தேவை அடிப்படையிலும், நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப, அவர்களின் விருப்பப்படி மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில், மின்சார சந்தையில் மின்சார விலையை நிர்ணயிக்க வழிவகை ஏற்படுத்தப்படும். மின் பகிர்மானத் தடங்களை பல்வேறு மின் பகிர்மான நிறுவனங்கள் பயன்படுத்தி, நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்ய முடியும். இதனால், மின் நுகர்வோருக்கு அவர்களின் தேவைக்கேற்ப விலை நிர்ணயித்து, தனியாரும் மின் விநியோகம் செய்யலாம். மின் பகிர்மான நிறுவனங்கள் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தின் காலக்கெடு வரை மட்டுமே மின் விநியோகம் செய்யலாம்.

மரபுசாரா எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு, தனியாக மரபுசாரா எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும். இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

மின் பகிர்மானத் துறையில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, மின் நிறுவனங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு மின் கட்டணத்தை சரியாக நிர்ணயிக்க வழி ஏற்படுத்தப்படும். இதனால், குறிப்பிட்ட காலக்கெடு வில் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை, மின் நிறுவனங் கள் மாற்றியமைப்பது கட்டாயமாக் கப்படும். அவ்வாறு மின் நிறுவனங்கள் மாற்றாவிட்டால், மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள் தாங்களாகவே மின் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும்.

இவை தவிர, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் வெளிப்படையாக தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். மின் ஆய்வுக் கட்டணங்களை வசூலிப்பதில் தலைமை மின் ஆய்வாளர், மின் ஆய்வாளர்களின் அதிகாரங்கள் அதிகரிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வருவோருக்கு சிறப்பு சலுகை, ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனங்களுக்கு தனியாக மின் பகிர்மான உரிமம் வழங்குதல் போன்றவற்றுக்கும் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x