

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.60 கோடி போதுமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக, கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளன. கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவல நிலையும் உள்ளது. ஆனால், இந்த ஆட்சியில் 2 சதவீதம் சாலைகள் மட்டுமே மழையால் சேதமடைந்துள்ளதாக இத்துறை யின் அமைச்சர் சட்டப்பேரவை யில் சொல்கிறார்.
ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலைப் பணிகளை செய்யவில்லை. தரமற்ற முறையில் செய்ததால்தான் முன்எப்பொழுதும் இல்லாத வகையில் சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. ஆனால் அமைச்சரோ, சாலைப் பணிகளை தரக்கட்டுப்பாடு சோதனை செய்த பின்னரே ஒப்பந்ததாரருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறுகிறார்.
நேர்மையான அதிகாரியான சென்னை மாநகராட்சி இணை ஆணையர் விஜய்பிங்ளே, ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலைகளை அமைக்கவில்லை என்பதை கண்டித்தும், அவர்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்த 3 நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் போடப்பட்ட சாலைகள்தான் தற்போது சேதம் அடைந்துள்ளதாக அமைச்சர் சொல்கிறார். அப்படியானால் அதிமுக அரசு பதவி ஏற்று மூன்றரை ஆண்டுகளாக எந்தச் சாலையும் போடவில்லையா? சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே இருந்து சட்டப்பேரவை உறுப்பினர் விடுதிக்கு செல்லும் சாலை போடப்பட்டு, சுமார் ஓராண்டு காலத்தில் அந்த சாலை போடப்பட்டதன் அடை யாளம்கூடதெரியாமல் உருமாறி உள்ளது. இது எந்த ஆட்சியில் போடப்பட்ட சாலை என்பதை அமைச்சர் விளக்குவாரா? தமிழகம் முழுவதும் இதேநிலைதான் உள்ளது.
மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான கி.மீ. சாலைகள் சேதம் அடைந்துள்ள நிலையில் சீரமைப்புப் பணிக்கு ரூ.60 கோடி மட்டும் ஒதுக்கினால் போதுமா? அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.