Published : 16 Dec 2014 08:42 AM
Last Updated : 16 Dec 2014 08:42 AM

இன்று சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறு, குச்சனூரில் பக்தர் வெள்ளம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் சன்னதியில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதை ஒட்டி நேற்று இரவுக்குள்ளாகவே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குவிந்ததால் திணறிக் கொண் டிருக்கிறது திருநள்ளாறு.

பிரசித்திபெற்ற சனி பகவான் திருத்தலமான திருநள்ளாறில் இன்று பிற்பகல் 2.43-க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார். கடந்த சனிப்பெயர்ச்சியின்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டனர். இன்று நடைபெறவுள்ள விழாவுக்கு 15 லட்சம் பேர் திருநள்ளாறுக்கு வருவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த முறையைவிட கூடுதலாக செய் துள்ளது மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் தரப்பு.

புதுவை மாநில போலீசாருடன் தமிழக போலீசார் 2,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணி நடை பெறுகிறது. அதன் அடிப்படையில் தேவைப்படும் இடங்களுக்கு கூடுதல் காவலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

நளன் குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு ஒரேநேரத்தில் 50 ஆயிரம் பேர் குளிக்கக்கூடிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் உடைமாற்ற கூடுதலான மறைவிடங்கள் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. கழிவறை வசதிகள் திருநள்ளாறு முழுக்க பல்வேறு இடங்களிலும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

நளன் குளத்தில் இருந்து சனீஸ்வரனை தரிசிக்கச் செல்லும் இடம் வரை தடுப்புக்கட்டைகள் வழியாகவே பக்தர்கள் வரவேண்டும். இலவச தரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண வழிகள், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி என்று பாதைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தேவை யானபோது வரிசையை நிறுத்தி வைத்து அனுப்புவதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதுமிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் நேற்று காலை முதலே பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதால் அம்மாநில பக்தர்கள் நேற்றே அதிகளவில் வந்து கோயில் பகுதியில் தங்கி யுள்ளனர்.

ஏராளமான பக்தர்கள் வந்துள்ள தால் காரைக்கால், திருநள்ளாறு, மயிலாடுதுறை, நாகப் பட்டினம், சீர்காழி பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. நேற்று இரவு வரை மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருநள்ளாறு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குச்சனூரில்…

சனிப்பெயர்ச்சியையொட்டி தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் அருள் மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் புகழ்பெற்ற தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள சுரபி ஆற்றில் நீராடி, சனீஸ்வரரை தரிசனம் செய் கின்றனர். சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, மஹா தீப ஆராதனை நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள ஆயிரக் கணக்கானோர் வருவர். விழாவை முன்னிட்டு சனீஸ்வர பகவான் கோவிலில் 2.15 மணிக்கு கணபதி ஹோமத்துடன் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ள வரும் ஆண், பெண் பக்தர்கள் சுரபி நதியில் குளித்து விட்டு உடைமாற்ற தற்காலிக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பரிகார தோஷம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வியாபாரிகள் உப்பு, பொரி, எள் தீபம், பூஜை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை, திண்டுக்கல், பெரிய குளம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேனி மற்றும் சின்னமனூர் வழியாக குச்சனூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பாதுகாப்பு பணிகளை மேற் கொள்ள போடி டிஎஸ்பி சீனிவாசப் பெருமாள் தலைமையில், 800-க்கும் மேற்பட்ட போலீசார் நிய மிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அதன் வீரர்களும் தயார்நிலையில் உள்ளதாக இந்து அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x