Published : 05 Dec 2014 10:13 AM
Last Updated : 05 Dec 2014 10:13 AM

முல்லை பெரியாறு வெற்றி வரலாற்றில் திமுக குறுக்குசால் ஓட்ட முடியாது: பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

முல்லை பெரியாறு வெற்றி வரலாற்றில் திமுக குறுக்குசால் ஓட்டக் கூடாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த காரணமான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் நேற்று அரசினர் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தின் மீது பேசிய துரைமுருகன் (திமுக), ‘இந்த வெற்றியில் திமுக தலைவர் கருணாநிதிக்கும் முக்கிய பங்கு உண்டு’ என்றார். பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) பேசும்போது, ‘பெரியாறு நீர்மட்டம் உயர்த்த பாடுபட்ட விவசாய சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். அணை யில் பணியாற்றும் தமிழக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றார். இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, ‘அணையைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்றார். மமக உறுப்பினர் ஜவாஹிருல்லா, ‘அணை பாதுகாப்பை தமிழகமே மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார்.

விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

உண்மைக்கு மாறான தகவல்களை திமுக உறுப்பினர் தொடர்ந்து கூறுகிறார். பூகம்பமே வந்தாலும் அணை உடைவதற்கு வாய்ப்பில்லை. வலுவாக உள்ளது என்ற நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சட்ட நுணுக்கங்கள் மூலம் முல்லை பெரியாறு வழக்கில், சட்ட அறிஞர்களுக்கு மக்களின் முதல்வர் (ஜெயலலிதா) ஆலோசனை வழங்கி, தமிழக அரசு சார்பில் வழக்கு நடத்தப்பட்டது. கடந்த 2006 பிப்ரவரி 27-ல் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பும் வந்தது.

இரு மாநிலப் பிரச்சினை என்பதால், மத்திய அரசின் கவனத் துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், திமுக அங்கம் வகித்த கூட்டணி ஆட்சியில் இந்தப் பிரச்சினை செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்துவிட்டது. கேரள பாசன திருத்தச் சட்டம் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து ஜெயலலிதாதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட மத்திய திமுக கூட்டணி அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். அனுமதி அளிக்கவில்லை என்று திமுக தலைவர் கூறினார். ஆனால், அனுமதி அளித்ததை மத்திய அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக திமுக அறிவித்துவிட்டு ஒன்றும் நடத்தவில்லை. அதிமுகதான் போராட்டம் நடத்தியது. எனவே, முல்லை பெரியாறு அணை வெற்றி வரலாற்றில் நீங்கள் (திமுக) குறுக்குசால் ஓட்ட முடியாது. தற்போது தீர்மானத்தில் தங்கள் கட்சித் தலைவர் பெயரையும் போடுங்கள் என்று கேட்பது, ‘பரீட்சையில் பெயில் ஆகிவிட்டேன். பாஸ் மார்க் போடுங்கள்’ என்று கேட்பதுபோல் உள்ளது.

இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

நீங்கள் எந்த காங்கிரஸ்?: விஜயதாரணிக்கு அமைச்சர் கேள்வி

சட்டப்பேரவையில் நேற்று முல்லை பெரியாறு அணை குறித்த தீர்மானத்தை ஆதரித்து, காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசினார். அப்போது அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தும் இந்தத் தீர்மானம்… என்று அவர் கூறியபோது, அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் குறுக்கிட்டு, ‘142 அடியாக உயர்த்தி விட்டோம். 152 அடியாக உயர்த்தத்தான் தீர்மானம்’ என்று கூறினார்.

தொடர்ந்து விஜயதாரணி பேசியபோது, ‘இந்தத் தீர்மானத்தை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது’ என்றார். அப்போது அமைச்சர் வளர்மதி குறுக்கிட்டு, ‘அகில இந்திய காங்கிரஸ் என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம். தற்போது காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில், இவர் எந்த காங்கிரஸ்?’ என்று கேட்டார்.

இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது. அதற்கு பதிலளித்த விஜயதாரணி, ‘இந்திய தேசிய காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட்டுதான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அந்தக் கட்சியின் உறுப்பினர்தான்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x