Published : 11 Dec 2014 10:04 AM
Last Updated : 11 Dec 2014 10:04 AM

என்றைக்கு தமிழகம் வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்: மதுரையில் வைகோ அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி என்றைக்கு தமிழகம் வந்தாலும் என் தலைமையில் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

திருமண விழா ஒன்றில் பங்கேற்க நேற்று காலை மதுரை வந்த வைகோ செய்தியாளர் களிடம் கூறியது: ‘மதிமுக தொண்டர்கள் பலத்த போலீஸ் கெடுபிடியை யும் தாண்டி திருப்பதி கோயிலுக்கே சென்று ராஜபக்சவுக்கு கருப்புக் கொடி காட்டியுள்ளனர். அப்போது கட்சியின் துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலர் வேளச்சேரி மணிமாறன் மற்றும் நிர்வாகிகளை ஆந்திர காவல்துறையினர் தாக்கியுள்ள னர். இதைப் படம்பிடிக்க முயன்ற தமிழக தொலைக்காட்சி கேமராமேன்கள், பத்திரிகை புகைப்படக்காரர்கள், செய்தி யாளர்களை ஆந்திர போலீஸார் அடித்து, கைது செய்து, கேமராக் களை பறித்து உடைத்துள்ளனர். கண்டனத்துக்குரிய இச்செயலில் ஈடுபட்ட காவல் துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கேட்டுக் கொள்கிறேன்.

மோடியை எதிர்த்து போராட்டம்

ராஜபக்சவை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்துக்காக மதிமுகவினர் கைதாகி சிறைக்குச் செல்வது பற்றி கவலையில்லை. அவர்களை விடுதலை செய்யுமாறும் கேட்க மாட்டேன். ஆனால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை உடனே விடுதலை செய்து, வழக்குகளை நீக்க வேண்டும். இப்பிரச்சினைக் காக ஆந்திரத்திலிருந்து வரும் பஸ்களை மறிப்பது, தேவஸ்தான அலுவலகங்கள் முன் போராட் டங்கள் நடத்தப்போவதாக சிலர் கூறுவது பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது. எய்தவன் இருக்க, கணையை நோவானேன். கணை ஆந்திர போலீஸ். எய்தது பிரதமர் நரேந்திர மோடி. எனவே நரேந்திர மோடி அரசை எதிர்த்துப் போராடுங்கள். முற்றுகையிடுங்கள்.

ராஜபக்சவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததற்கான காரணம் கேட்டபோது, சார்க் நாடுகள் எனக் காரணம் கூறி கையைப் பிசைந்தார் நரேந்திர மோடி. இப்போது திரும்பவும் எதற்காக அவரை திருப்பதிக்கு அழைத்து வந்தீர்கள்? லட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என ராஜபக்சவின் ஏஜெண்டான ஒருவர் கூறுகிறார். அதைக் கண்டிக்கவில்லை. காட்மாண்டுவில் கைகுலுக்கி ‘ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்தீர்கள். இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து தொடர்ந்து எட்டி மிதிக்கும் மோடி அரசுக்கு சொல்கிறேன். இதுநாள் வரை ராஜபக்ச எப்போது இந்தியா வந்தா லும் கருப்புக் கொடி காட்டுவதாக கூறி வந்தோம். இப்போது சொல் கிறேன். இனி பிரதமர் மோடி தமிழ கத்துக்கு என்றைக்கு வந்தாலும் என் தலைமையில் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x