

தூத்துக்குடி ஸ்பிக், சென்னை மணலி உர தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் நாஃப்தாவுக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாஃப்தாவை மூலப்பொரு ளாகக் கொண்டு தமிழகத்தில் இயங்கிவரும் தூத்துக்குடி ஸ்பிக், சென்னை மணலி உரத் தொழிற் சாலைகளுக்கு மத்திய அரசின் காஸ் இணைப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் வரை தொடர்ந்து மானியம் வழங்குவது தொடர்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, தங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தின் பேரில், செப்டம்பர் 30-ம் தேதி வரை மானியத்தை நீட்டித்து வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. மானிய நீட்டிப்பு தொடர்பாக எவ்வித தகவலும் வராததால் மேற்கண்ட இரு ஆலைகளும் அக்டோபர் 1 முதல் மூடிக்கிடக்கின்றன.
இதனால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் தமிழகத்தில் யூரியா உற்பத்தியிலும் இடையூறு ஏற்பட்டது. இதனால், யூரியாவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவானது.
இரு உர தொழிற்சாலைகளை மேலும் 100 நாட்கள் இயக்குவதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருப்ப தாகவும், அந்த தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நாஃப்தா மீதான ‘வாட்’ வரி விதிப்பை கைவிடக் கோரியும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உர அமைச்சக செயலாளர் கடிதம் எழுதியிருந்தார். தமிழகம் ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலிலும், இரு ஆலைகளை இயங்க வைப்பதற்காக நாஃப்தா மீதான வாட் வரி வருவாயை இழக்க தயாராக உள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள், ஏற்றுமதி விலையைவிட உர தொழிற்சாலைகளுக்கு அதிக விலையிலேயே நாஃப்தாவை விற்பனை செய்கின்றன. ஏற்றுமதி விலையிலேயே உர தொழிற்சாலைகளுக்கும் வழங்குவதுதான் நியாயம். எனவே, தமிழகத்தின் இரு உர ஆலைகளுக்கான மானிய நீட்டிப்பு குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசின் காஸ் இணைப்பு வசதி கிடைக்கும் வரை இந்த ஆலைகளுக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும். சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட இதர காரணங்களை கருத்தில்கொண்டு, தமிழகத்துக்கான யூரியா ஒதுக்கீட்டை இந்த இரு ஆலைகளில் இருந்து வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.