Published : 22 Dec 2014 12:21 PM
Last Updated : 22 Dec 2014 12:21 PM

வைகுண்ட ஏகாதசி பெருவிழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று பகல்பத்து உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை யொட்டி திருமொழித் திருநாள் எனும் பகல்பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது.

இதையொட்டி, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் காலை 6.45 மணிக்கு புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் 7.30 மணிக்கு எழுந்தருளுகிறார். அதன்பின் அரையர் சேவையுடன் காலை 8.15 மணி முதல் பகல் 1 மணி வரை நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அப்போது திருமொழி பாசுரங்களை அரையர்கள் பாடுவர். தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5.30 மணிவரை உபயதாரர்கள் மரியாதைகளுடன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், மாலை 6.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

பகல்பத்து உற்சவத்தின் கடைசி நாளான டிசம்பர் 31-ல் நம்பெருமாள் மோகனி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு ஜனவரி 1 அதிகாலை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.

பெரிய பெருமாளான மூலவர் முத்தங்கியில் பகல்பத்து, ராப்பத்து ஆகிய 20 நாட்களும் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன், மேலாளர் விஜயன், கோயில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x