

இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த அதிமுக உறுதி பூண்டுள்ளது என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக எடுக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதில் 43 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:
தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அரிசிக்கான குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இதுதவிர, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும், 1 கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், கிலோ சர்க்கரை ரூ.13.50-க்கும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் உணவுப் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் வழங்கும் திட்டமாகும். எனவே, மற்ற மாநிலங்களில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கையை அதிமுக எடுக்கும்.
மத்திய, மாநில அரசுகள் ஒன்றையொன்று கட்டுப்படுத்தாமல் தத்தம் எல்லைக்குள், சுதந்திர செயல்பாட்டோடு பொதுப் பிரச்சினைகளை கூட்டுறவு மனப்பான்மையுடன் அணுக வேண்டும். இந்தக் கூட்டுறவு கூட்டாட்சியை நிலைநிறுத்த அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
தமிழக மீனவர் நலன்
அப்பாவி தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவோம். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் அதிமுக எடுக்கும். காசிமேடு, கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மீன்பிடித்துறை முகங்கள் நவீனமயமாக்கப்படும். பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கடலோர மாவட்டங்களில் உள்ள நதி முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும்.
எண்ணூர், கடலூர், பூம்புகார், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் கடல் அரிப்புப் பிரச்சினையை தடுக்க நிதி ஒதுக்கப்படும்.
பொது வாக்கெடுப்பு
இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க ஐ.நா. சபையை வலியுறுத்தவும், தனி ஈழம் அமைத்திட இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதி பூண்டுள்ளது.
இலங்கையில் தனி ஈழம் அமைய அங்கு வாழும் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்படும். மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் இடஒதுக்கீடு
மகளிருக்கான மேம்பாட்டு திட்டங்களை தேசிய அளவில் மேம் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.மகளிருக்கான இடஒதுக்கீட் டுக்கு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அதிமுக பாடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.