Last Updated : 26 Dec, 2014 10:11 AM

 

Published : 26 Dec 2014 10:11 AM
Last Updated : 26 Dec 2014 10:11 AM

தமிழகத்தில் 11 மாதங்களில் சாலை விபத்துகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு: அநியாய உயிர்ப்பலி தடுக்கப்படுமா?

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் வாகன விபத்துக்களில் 14,011 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இது சற்று குறைவு என்றபோதிலும், விபத்துக்களைக் குறைக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் வாகனப் பெருக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த 1993-ம் ஆண்டில், தமிழகத்தில் வெறும் 19.21 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, தற்போது, 2 கோடியாக உயர்ந்துவிட்டது.

கடந்த 2012 வரை, தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டிலேயே சாலை விபத்துக்களில், தமிழகம்தான் முதலிடத்தில் இருந்து வந்தது. கடந்த 2003-ம் ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில்தான் 58 ஆயிரம் விபத்துக்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு தொடர்ந்து 2012 வரை விபத்துக்களின் எண்ணிக்கையிலும், அது தொடர்பான உயிரிழப்புகளிலும் தமிழகம் முதலிடத்தில் இருந்து வந்தது.

கடந்த 2008-ம் ஆண்டில், தமிழகத்தில் நடந்த 60,409 சாலை விபத்துக்களில் 12,784 பேர் பலியானார்கள். அப்போது, மாநிலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை, 1.07 கோடியாகும். வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில், விபத்துக்களின் சராசரி சதவீதம், 0.56 ஆகவும், உயிரிழப்பு 0.11 சதவீதமாகவும் இருந்தது.

அதன்பிறகும், விபத்துக்களும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது.

2012-ல் நாட்டிலேயே சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலமாக தமிழகம் மாறியது. அந்த ஆண்டில், மொத்தம் 67,757 சாலை விபத்துக்களில், 16,175 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் பலதரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாமையும், நெடுஞ்சாலைகளில் விபத்துத் தடுப்பு ஏற்பாடுகள் பற்றாக்குறை பற்றியும் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் சற்று குறைந்தன. 2012-ல் 16,175 ஆக இருந்த உயிரிழப்புகள் அப்போது 15,563 ஆகக் குறைந்தது. அந்த ஆண்டில் விபத்து சதவீதமும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.5 சதவீதமும், உயிரிழப்புகள் 0.01 சதவீதமும் குறைந்தது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும், விபத்து உயிரிழப்பு சராசரியும் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 2013 இறுதியில் 15,563 பேர் விபத்துக்களில் உயிரிழந்தனர். அப்போது, சாலை விபத்துக்களின் சராசரி, 0.36 ஆகவும், உயிரிழப்புகளின் சராசரி, 0.08 ஆகவும் இருந்தது.

இந்தநிலையில், இந்த ஆண்டு நவம்பர் வரை தமிழகத்தில் நடைபெற்ற 61,688 சாலை விபத்துக்களில் 14,011 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகம்தான் என்றபோதிலும், வாகன எண்ணிக்கையை (நவ.30 வரை 1.989 கோடி) வைத்துப் பார்க்கையில் விபத்துக்களின் சதவீதம் கடந்த ஆண்டைவிட 0.5 சதவீதமும், உயிரிழப்பு 0.01 சதவீதமும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு நவம்பர் இறுதி நிலவரத்தைக் கணக்கிடும்போது விபத்து 2.62 சதவீதம் குறைந்திருப்பதாகவும், உயிரிழப்பு 2.59 சதவீதமும் குறைந்திருக்கிறது என்று போக்குவரத்துத் துறையினர் தெரிவித் தனர்.

தமிழகத்தில் விபத்துகள், உயிரிழப்பு குறைந்திருப்பது குறித்து போக்குவரத்துத் துறையினர் கூறியதாவது:-

தமிழகத்தில் விபத்துக்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை மையங்கள் முக்கிய காரணமாகும். இதன் மூலம் 2011-12ல் 4,429 பேரும், 2013-14ம் ஆண்டில் 5,266 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் அதிகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகளில், விபத்துக்கள் நிகழும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், போலீஸ் மற்றும் போக்குவரத்துத் துறையினரின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எனினும், 11 மாதங்களில் 14 ஆயிரம் பேர் விபத்தில் உயிரிழந்திருப்பது சாதாரணமான விஷயம் அல்ல. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தனியார் வாகன ஓட்டுநர்கள் ஓய்வின்றி வாகனங்களை ஓட்டுதல், பைக் ரேஸால் ஏற்படும் அநியாய உயிரிழப்புகள், தகுதியற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது போன்றவற்றைத் தடுத்தாலே உயிரிழப்புகள் பெரிதும் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், சாலைகளை முறையாக பராமரித்து, தேவைப்படும் இடங்களில் வேகத்தடைகளை அமைத்து, போக்குவரத்து விதிகளை கடுமையாக அமலாக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x