

சென்னை மூலக்கடையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திட்டக்காலம் முடிந்து 19 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இன்னமும் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான போக்குவரத்து நெரிசல், புகை, தூசியால் அவதிப்படுகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வருகின்றன. அவை மூலக்கடை பகுதி வழியாகத்தான் செல்கின்றன. மாதவரம், கொடுங்கையூர், மணலி பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் மூலக்கடை சந்திப்பு வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது.
இங்கு போக்குவரத்து நெரி சலை சமாளிக்க ரூ.49.55 கோடி செலவில் மேம்பாலம் கட்ட அரசு திட்டமிட்டு, கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 18 மாதங்களில் மேம்பாலம் கட்டும் பணி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்டக்காலம் முடிவடைந்து தற்போது 19 மாதங்கள் ஆகி யுள்ள நிலையில் பணிகள் 50 சதவீதம் அளவுக்கு கூட முடியாமல் இருக்கிறது.
இதனால் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது காலை, மாலை நேரங்களில் மாநகர பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற் கின்றன. மேலும் தூசு, புகை பரவுவதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர காரணமாக அமைந்துள்ளது.
2015 ஜூனில் முடிக்கப்படும்
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘இந்த பாலத்துக்காக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், ஒப்பந்தாரர்கள் தேர்வு செய் வதிலும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், சில மாதங்கள் பணிகள் நிறுத்தப்பட்டன.
நில உரிமையாளர்களிடம் பேசி, போதுமான இடத்தை பெற்று விட்டோம். தற்போது, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வரும் 2015 ஜூனில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.