Published : 31 Dec 2014 10:38 AM
Last Updated : 31 Dec 2014 10:38 AM

கூடங்குளம் முதலாவது அணு உலையில் வணிக ரீதியில் மின்உற்பத்தி தொடக்கம்

அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, கூடங்குளம் முதலாவது அணுஉலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி நேற்று நள்ளிரவுக்கு பின் தொடங்கியது.

கூடங்குளம் முதலாவது அணு உலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. ஜூன் 7-ம் தேதி முழு உற்பத்தியான 1000 மெகாவாட்டை எட்டியது. பின்னர் ஆய்வுக்காக அணு உலை மற்றும் டர்பைன் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. மின் உற்பத்தி செய்யும் டர்பைன் ஜெனரேட்டரில் பழுது இருப்பது கண்டறியப்பட்டது. புதிய டர்பைன் பொருத்தப்பட்டு, கடந்த 8-ம் தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 2 நாளில் மின்உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டியது.

முதலாவது அணுஉலை யிலிருந்து 300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டதாக கடந்த 12-ம் தேதி அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார். வணிக ரீதியில் மின் உற்பத்திக்கு அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதல் கேட்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இந்த ஒப்புதல் கிடைக்கப்பெற்றதை அடுத்து நள்ளிரவு 12.01 மணியிலிருந்து வணிக ரீதியில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டதாக அணுமின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை ஒரு யூனிட் மின்சாரம் ரூ.1.22-க்கு வழங்கப்பட்டு வந்தது. வணிக ரீதியில் மின் உற்பத்தி தொடங்கியதால் இனி ஒரு யூனிட் ரூ.4-க்கு வழங்கப்படும். ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 562 மெகாவாட் தமிழகத்துக்கும், 34 மெகாவாட் புதுச்சேரிக்கும், 221 மெகாவாட் கர்நாடகத்துக்கும், 133 மெகாவாட் கேரளத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மீதமுள்ள 50 மெகாவாட் மின்சாரத்தை எந்த மாநிலத்துக்கு விநியோகம் செய்வது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x