

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசும், பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசும் தடுப்பணைகள் கட்டும் முயற்சிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும், அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் இந்த இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, மாதாந்திர வாரியாக பெறுவதற்கு ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கர்நாடக அரசு மேகேதாட்டுவில் 2 புதிய அணைகள் கட்ட முயற் சிப்பதையும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் காவிரி நீர்வாரி நிகமம் வாயிலாக மேற்கொண்டுள்ள திட்டங்களை யும், தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்துக்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ் நாட்டின் அனுமதியின்றியும் மேகேதாட் டுவில் அணைகள் கட்டும் திட்டம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடகம் செயல்படுத்த முனையக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
பம்பை ஆற்றின் குறுக்கே பட்டிசேரி என்னுமிடத்தில் புதிய அணை கட்டும் எந்தப் பணியையும் கேரள அரசு மேற்கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் எந்த ஒரு திட்டத்தையும் கேரளம் செயல்படுத்த முனையக்கூடாது என்றும், கேரள அரசுக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
கர்நாடக, கேரள அரசுகளின் எத்தகைய திட்டங்களுக்கும் மத்திய நீர் ஆதார அமைச்சகம் தொழில்நுட்ப ரீதியான அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவஹிருல்லா (மமக), கணேஷ் குமார் (பாமக), கலையரசு (பாமக அதிருப்தி எம்எல்ஏ), விஜயதாரணி (காங்கிரஸ்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), கு.பால கிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் ஆதரவு தெரிவித்து வரவேற்று பேசினர்.