Published : 04 Apr 2014 08:02 AM
Last Updated : 04 Apr 2014 08:02 AM

அ.தி.மு.க.வை ஆதரிப்பது ஏன்?- தி இந்துவிடம் மனம் திறந்த மதுரை ஆதீனம்

“சமுதாயம் நன்றாக இருந் தால்தான் சமயம் நன்றாக இருக்க முடியும். ஏன் ஆலயமும் ஆதீனமும் இருக்க முடியும்” என்று அதிமுக-வை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்ய வந்திருந்த அவர், 'தி இந்து'வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

ஆன்மிகவாதியான நீங்கள், அதிமுக-வை ஆதரிப்பதோடு, பிரச்சாரமும் செய்கிறீர்களே?

மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் இந்த நாட்டின் குடிமகன். ஒரு வாக்காளனும்கூட. சமுதாயம் நன்றாக இருந்தால்தான் சமயம் நன்றாக இருக்க முடியும். ஏன் ஆலயமும் ஆதீனமும் இருக்க முடியும். இந்த நாட்டின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்? இந்த நாட்டில் ஆட்சிக் கட்டிலில் யாரை அமர்த்த வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பும், கடமை உணர்வும், உரிமையும் இந்த ஆதீனத்துக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் அதிமுக-வை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன்.

அ.தி.மு.க.வை ஆதரிக்க வலுவான காரணம் இருக்கிறதா?

இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக நல்ல பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதாதான் வகுத்திருக்கிறார். மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இலங்கை தமிழர்பால் அவர் கொண்டிருக்கும் தாயுள்ளம் என்னை ஈர்த்தது.

அரசியல் வேகத்தில் உங்கள் ஆன்மிகப் பணி எந்த அளவுக்கு இருக்கிறது?

தமிழகம் முழுவதும் சைவ சித்தாந்தத்தை பரப்பி வருகிறேன். மாற்று மதத்தில் இருந்து தாய் மதம் திரும்புபவர்களுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறோம். தேவாரம், திருமறை வகுப்புகள் எடுத்து வருகிறோம். குட முழுக்கு விழா, இலக்கிய விழா, கல்லூரி, பல்கலை விழாக்களில் மத நல்லிணக்கத்தை காக்கும் வகுப்புகளும் எடுத்து வருகிறோம்.

மதுரை ஆதீனத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்சினைகள்...?

(இடை மறிக்கிறார்) அதை ஆண்டவனே செய்து வைத்து, ஆண்டவனே தீர்த்து வைச்சுட்டாரு. நல்லது, தீயது எல்லாம் அவன் செயல்.

அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்று பிரச்சாரம் செய்கிறீர்களே… சாத்தியமா?

ஜெயலலிதா பிரதமர் ஆவதற்குதான் வாய்ப்பு அதிகம். இந்திய நாட்டு மக்களின் நலன் பேணும் தலைவர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று அனைவரும் விரும்பும்போது, அந்த தலைமைத்துவம் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

அ.தி.மு.க. மேடையில் ஆங்கிலத்தில் இடை, இடையே பேசுகிறீர்களே? இது கட்சிக் கூட்டத்துக்கு வரும் பாமர மக்களுக்கு புரியுமா?

தமிழகத்தில் இப்போது பெரும்பான்மையான மக்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. ஆங்கிலம் ஒரு உலக பொது மொழி ஆகிவருகிறது. அதனால் என்னுடைய ஆங்கில மேற்கோள்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

திமுக-வில் அழகிரி...?

(முடிப்பதற்குள் இடைமறித்து) ஜெயலலிதா போன்ற உயர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்போது, திசை மாறி பயணிக்கக்கூடாது.

வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் நாட்டைப் பாதுகாக்க, பொருளாதார சீர் குலைவை தடுக்க, பயங்கரவாதம் ஒடுக்கப்பட, அமைதி ஏற்பட, விலைவாசி குறைய அதிமுக-வுக்கு வாக்க ளித்து, ஜெயலலிதாவை பிரதம ராக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x