

நாகர்கோவில் அருகே மனைவி மற்றும் மகளுடன் சுங்கத்துறை ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆரல்வாய்மொழி அருகில் உள்ள வெள்ளமடம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (57). இவரது மனைவி வசந்தி (52). குழந்தை இல்லாததால் அபிஸ்ரீ (13) என்ற பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர். கடந்த 20-ம் தேதி வீட்டுத் தோட்டத்தில் வசந்தியும், அபிஸ்ரீயும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அன்று முதல் சுப்பையாவையும் காணவில்லை. 26-ம் தேதி வனப்பகுதியில் அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சுப்பையாவுடன் கடைசியாக அதே பகுதியைச் சேர்ந்த டேனியல் மகன் மெரின் ராஜேந்திரன் என்பவர் பைக்கில் சென்றது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெரின் ராஜேந்திரன் எம்.ஏ., பி.எட். படித்தவர். அவருக்கு பங்குச்சந்தையில் ரூ. 40 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. சுப்பையா வீட்டில் தங்கக்கட்டிகள் இருப்பதாக மெரினுக்கு தகவல் கிடைத்தது. அதைக் கைப்பற்ற திட்டமிட்டார்.
சுப்பையா மற்றும் வசந்தியை சந்தித்த அவர், தன்னிடம் ஆன்லைன் மூலம் சம்பாதித்த ரூ.35 லட்சம் இருப்பதாகவும், அதை வீட்டில் வைத்திருக்குமாறும் கூறியுள்ளார். அந்தப்பணத்தை கண்ணுப்பொத்தை வனப்பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கூறி, 19-ம் தேதி சுப்பையாவை அப்பகுதிக்கு பைக்கில் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.
மீண்டும் சுப்பையாவின் வீட்டுக்குச் சென்று வசந்தியையும், அபிஸ்ரீயையும் கொலை செய்துள்ளார். வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் மெரினுக்கு தங்கக்கட்டி எதுவும் இல்லை என தெரிய வந்தது. அங்கிருந்த 15 பவுன் நகைகளை கொள்ளை யடித்துவிட்டு தப்பினார்.