கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இழப்பீடு கோர 15 நாட்கள் கால நீட்டிப்பு - விசாரணை ஆணையத் தலைவர் அறிவிப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இழப்பீடு கோர 15 நாட்கள் கால நீட்டிப்பு - விசாரணை ஆணையத் தலைவர் அறிவிப்பு
Updated on
1 min read

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு கோரும் மனுக்களை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என இழப்பீடு நிர்ணய ஆணையத்தின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி கோ.வெங்கடராமன் கும்பகோணத் தில் நேற்று தெரிவித்தார்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஒரே சிறிய கட்டிடத்தில் இயங்கிய கிருஷ்ணா பள்ளியில், 2004, ஜூலை 16-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் பலத்த தீ காயமடைந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூலை 30-ல் தஞ்சை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோ ருக்கு ரூ.1 லட்சம், காயமடைந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது.

ஆனால், தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரில் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுபடி, ஒய்வுபெற்ற நீதிபதி கோ.வெங்கடராமன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த மாதம் அமைத்தது.

இந்த ஆணையம் கடந்த நவ.12 முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மனுக் களை பெற்றுவந்தது. டிச.5 (நேற்று) கோரிக்கை மனுக்களை அளிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதுவரை, 10 பேர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி தீ விபத்தில் ஆவணங் கள் எரிந்துவிட்டதாலும், இருக் கின்ற ஆவணங்களில் பெற்றோர் மற்றும் இறந்தவர்கள், காயமடைந் தவர்களின் பெயர்களில் பிழைகள் உள்ளதாலும் மனுக்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மனுக்களை பெறும் இறுதி நாளான நேற்று ஆணையத்தின் தலைவர் கோ.வெங்கடராமன், மற்றும் விசாரணை ஆணைய அலுவலர்கள் கும்பகோணம் வந்து தீ விபத்து நடந்த பள்ளியை பார்வையிட்டனர். பின்னர் பள்ளி முன்பு திரண்டிருந்த குழந்தைகளின் பெற்றோரை அவர் சந்தித்தார்.

இதையடுத்து கோ.வெங்கட ராமன் பேசும்போது, “இழப்பீடு கோரி மனு அளிக்க இன்று (டிச.5) இறுதி நாள். இதுவரை 10 மனுக்கள் மட்டுமே வந்துள்ளன.

ஆவணங்கள் நிறையத் தேவைப்படுவதால் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், வழக்கறிஞர் மூலமாக 1 மாத கால நீட்டிப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதை ஏற்று, 15 நாள் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in