Last Updated : 12 Dec, 2014 11:50 AM

 

Published : 12 Dec 2014 11:50 AM
Last Updated : 12 Dec 2014 11:50 AM

புத்தாண்டு முதல் பணிகள் தொடக்கம்: புது வேகமெடுக்கிறது கூவம் ஆறு சுத்தப்படுத்தும் திட்டம்

கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டம் முதல் சென்னை வரை சீரமைக்கப்பட வேண்டிய 60 பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. வரும் புத்தாண்டு முதல் பணிகள் தொடங் கப்படும் எனத் தெரிகிறது.

தேம்ஸ் நதி

நீர்வழிப் போக்குவரத்திலும், வணிகத்திலும் முக்கியப் பங்கு வகித்ததால் ‘தென்னிந்தியாவின் தேம்ஸ்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட கூவம் ஆறு தற்போது சீர்கெட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சட்டரை என்னும் இடத்தில் உள்ள கூவம் குளத்தில் இருந்து உபரியாக வெளி யேறும் நீர் ஓடியதால் இதற்கு அப்பெயர் வந்தது. மொத்தம் 72 கி.மீ. நீளம் கொண்ட கூவம் ஆறு, பேரம்பாக்கம், மணவாள நகர் (திருவள்ளூர்), அரண்வாயல் குப்பம், பருத்திப் பட்டு (ஆவடி), கொரட்டூர் வழியாக அரும்பாக்கத் தில் நுழைகிறது. சென்னையில் அமைந்தகரை பாலம், ஸ்பர்டேங்க் பாலம், சிந்தாதிரிப்பேட்டை பாலங் களைக் கடந்து, இறுதியில் நேப்பியர் பாலம் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

1960 வரை சுத்தமாக இருந்த கூவத்தில் படகுப் போக்குவரத்தும், மீன்பிடித் தொழிலும் நடந்து வந்தது. ஆனால், அடுத்து வந்த ஆண்டு களில் படுவேகமாக மாசடைந்தது. சென்னை நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம், கரையோர ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் நாற்றமெடுக்கும் ஆறாக அது நிரந்தரமாய் உருமாறிப்போனது. அதைச் சீரமைக்க பல்வேறு அரசுகள், திட்டங்களைத் தீட்டி னாலும், சுத்தமான கூவம் என்பது சென்னை வாசிகளின் கனவாகவே உள்ளது.

ரூ,3,883 கோடி ஒதுக்கீடு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பை (சி.ஆர்.ஆர்.டி.) தமிழக அரசு ஏற்படுத்தி கூவத்தை சுத்தப்படுத்த மீண்டும் தீவிர முயற்சிகளையும், ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி யில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “அடுத்த 5 ஆண்டுகளில், சென்னை நகருக்கு உட்பட்ட இடங்களில் மாசடைந்திருக்கும் கூவம் ஆறு, ரூ.3,833.62 கோடியில் சீரமைக்கப்படும். 2014-15-ம் ஆண்டுக்கான பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படும்” என்று அறிவித்தார்.

ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

இதற்கிடையே, கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளும் பணியை, தமிழக நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவை கள் (TUFISIL) என்ற மற்றொரு அரசு நிறுவனத்திடம், சிஆர்ஆர்டி ஒப்படைத்தது.

அந்நிறுவனம், இது தொடர்பாக விரிவான ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் அளித்திருந்தது. அந்த நிறுவனம் பல்வேறு அம்சங்களை பட்டிய லிட்டு அரசிடம் சமீபத்தில் அறிக்கை அளித்தது.

உயர்மட்டக்குழு ஒப்புதல்

இது குறித்து தமிழக அரசு வட்டாரங்கள், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது: சமீபத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வறிக்கைக்கு தமிழக அரசின் உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துவிட்டது. எனவே விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன. இதன்படி, ஆவடி அருகில் உள்ள பருத்திப்பட்டில் இருந்து 32 கி.மீ. நீளத்துக்கு கூவத்தை சுத்தப்படுத் தும் பணிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூவம் ஆறு நெடுக 60 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது, திடக்கழிவு மேலாண்மை, கரையோரங்களை அழகுபடுத்துதல் மற்றும் மீன் உள்ளிட்டவை வாழ்வதற்கேற்ப சூழலியல் மாற்றங்களை ஏற்படுத் துவது ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை யில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்குறிப்பிடப்பட்ட 60 பணியி டங்களும், சென்னை மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியம் மற்றும் பொதுப் பணித்துறை ஆகிய துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். புத்தாண்டில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு தரப்பினர் கருத்து

மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்புக்குழுத் தலைவர் கே.முகுந்தன்:

பருத்திப்பட்டு அணையில் தொடங்கி சென்னையில் கடல் முகத்துவாரம் வரை கூவத்தைச் சுத்தப்படுத்தத் திட்டமிட்டுள்ள அதே வேளையில், அதற்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 40 கி.மீ. நீளம் கொண்ட சுத்தமான கூவம் ஆறு மாசுபடுவதைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தகுந்த திட்டமிடல்களையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

புதிதாக வளர்ச்சியடைந்துவரும் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதாளச் சாக்கடை நீரைச் சுத்திகரித்து கூவத்தில் விடுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அது போன்ற திட் டங்களைத் தடுத்து, பருத்திப்பட்டுக்கு அப்பால் உள்ள, சுத்தமான கூவம் ஆற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், கூவம் செல்லும் வழிகளில் அமைந்துள்ள 30 ஏரிகளுக்கு, இந்த ஆறிலிருந்து நீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நீராதாரம் பெருகும்.

இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய (இன்டாக், சென்னை) அமைப்பின், அமைப்பாளர் டாக்டர் எஸ்.சுரேஷ்:

இரண்டாயிரம் ஆண்டுகளாக கூவம் ஆற்றில் வாணிகம் நடந்து வந்தது. ரோமானியர்களும் இந்த ஆற்றில் பயணம் செய்து வணிகத் தில் ஈடுபட்டு வந்தனர். நமது கலாச்சார புகழை தாங்கி நிற்கும் இந்த ஆறு, 1960-க்குப் பிறகுதான் சீர்கெட்டுவிட்டது. அதை சுத்தப் படுத்த பல்வேறு அரசுகள் திட்டங்களைத் தீட்டினாலும், அது கொஞ்சம் சிரமமான விஷயம் என்பதால் கைகூடாமல் போய்விட்டது. இப்போதைய அரசு, கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்திருப்பது வரவேற்புக்குரியதே. ஆனால், இந்த பிரச்சி னையில் தொடர்புடைய அனைத்து அரசுத் துறைகளையும் செம்மை யாக ஒருங்கிணைத்து, பணிகளைத் துரிதப்படுத்தினால், திட்டமிட்டபடி 5 ஆண்டுகளில் முடிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x