

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் 93-வது பிறந்தநாளையொட்டி, கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி நேற்று நேரில் சென்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் சென்று வாழ்த்துகளை தெரிவித் தனர்.
இதேபோல், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வேலு, தா.மோ.அன்பரசன், முத்துசாமி, ஆ.ராசா, தொமுச தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் சண்முகம், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழக அரசுக்கு கண்டனம்
இதையடுத்து, காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலளிக்கும்போது, “நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதிலும் தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுவதிலும் கர்நாடக அரசு முன்னணியில் இருக்கிறது. அதை எதிர்க்கிற அதே நேரத்தில் இப்பிரச்சினையைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்ற இன்றைய தமிழக அரசை நான் திமுக சார்பில் கண்டிக்கிறேன்” என்றார்.
கி.வீரமணி வாழ்த்து
திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி திருச்சியில் இருந்ததால், அவர் செல்போன் மூலம் அன்பழ கனுக்கு வாழ்த்துகளை தெரிவித் துள்ளார். மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘எப்போதும் பெரியார் கொள்கையுடனும், அண்ணா வழியை மறக்காமலும் 90 வயது தாண்டிய நிலையில் உள்ள பேராசிரியர் தம் வாழ்வில் எல்லா நலன்களுடன் ஓங்கி சிறக்க வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.