Published : 21 Apr 2014 08:30 AM
Last Updated : 21 Apr 2014 08:30 AM

தேர்தல் நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் வழித்தடங்கள் பிரிப்பு: துணை மின் நிலையங்கள், வாக்கு மைய பொறியாளர்களுக்கு உத்தரவு

தேர்தல் நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க, வாக்குப் பதிவு மையங்களுக் கான மின் வழித்தடங்கள் தனித்தனி யாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளில், அனைத்து துணை மின் நிலையங்களிலும் பொறி யாளர்கள் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி, 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஒரே கட்டமாக நடப்பதால், அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் தடையற்ற மின்சார விநியோகம் செய்ய வேண்டுமென்று தமிழக மின் வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் தற்போது மின்சார உற்பத்தி நிலைமை, கடந்த வாரத்தை விட முன்னேற்றமாக உள்ளது. தமிழகத்தின் அனைத்து அனல் மின் நிலையங்களும் முழுமையான உற்பத்தியை மேற்கொண்டுள்ளன. காற்றாலை மின் உற்பத்தியும் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்நிலையில், தடையில்லா மின் சாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக மின் துறை அதிகாரிகள் முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காற்றாலை மின்சாரம் உறுதியில்லா மல் இருப்பதால் தமிழகத்திலுள்ள சுமார் 60 ஆயிரம் வாக்குப்பதிவு மையங் களுக்கு மின்சாரம் வினியோகம் செய் யும் மின் வழித்தடங்களும், மின்னூட்டி களும் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், நேரலை வீடியோ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், தேர்தல் அலுவலகங்கள், நேரலை வீடியோ கண்காணிப்பு குழு அலுவலகம், வாக்கு இயந்திரங்களுக்கு மின்சார சார்ஜ் ஏற்றும் அறைகள் உள்ள பகுதிகள், மின்சாரம் வழங்கும் மின் தடங்கள் ஆகியன பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த மின்னூட்டிகளில் ஏப்ரல் 23ம் தேதி பிற்பகல் முதல் 24ம் தேதி இரவு வரை தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் ஒரு சில இடங்களில் அதிக அளவு இணைப்பு கொண்ட டிரான்ஸ்பார்மர் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மின்னூட்டி வழியே மின் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து துணை மின் நிலையங்களிலும் நிலைமையை சமாளிக்கும் வகையில் பொறியாளர்கள் தயார் நிலையில் பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல், வாக்குப்பதிவு மையங்களின் பகுதிக்குட்பட்ட மின் விநியோக பொறியாளர்கள், தேர்தல் நாளில் ரோந்துப் பணியிலும், கண்காணிப்புப் பணியிலும் இருக்கவும், சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையங்களின் வாக்குச்சாவடி அதிகாரிகளின் செல்போன் எண்களை பெற்று உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் மின் விநியோகத் துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

தேர்தல் நாளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுத் துறைகளைத் தவிர மற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும், தனியாருக்கும் விடுமுறை நாள் என்பதால், அன்றைய தினம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பம்புசெட்டுகளுக்கான மின் விநியோகம் இருக்காது என்பதால் மின்சார தட்டுப்பாடு இருக்காது என்றும் அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x