Published : 06 Dec 2014 10:16 AM
Last Updated : 06 Dec 2014 10:16 AM

தமிழகத்தை விட்டு எந்த தொழிற்சாலையும் வெளிமாநிலத்துக்கு செல்லவில்லை: பேரவையில் அமைச்சர் விளக்கம்

தமிழகத்தை விட்டு எந்தத் தொழிற் சாலையும் வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை என்று தமிழக தொழிற்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.

தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது, முதலீட்டாளர் களுக்கு தமிழகம் சாதகமாக இல்லை என்று, சட்டப் பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது உறுப்பினர்களின் கேள்விக்கு தொழிற்துறை அமைச்சர் பி.தங்கமணி அளித்த பதில்:

கடந்த 2005-ல் அதிமுக ஆட்சியில்தான் ‘நோக்கியா’ நிறுவனம் தமிழகத்துக்கு வர ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 2012-ல் திமுக, காங்கிரஸ் மத்திய கூட்டணி அரசு முன்தேதியிட்ட சட்டம் கொண்டு வந்து, நோக்கியா நிறுவனம் ரூ.2,080 கோடி வருமான வரி கட்ட நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து நோக்கியா வழக்குப் போட்டபோது, வழக்குத் தள்ளுபடியானது. இந்தத் தொழிற்சாலை வெளியே செல்வதாக சொன்னபோது திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், இப்போது தொழிற்சாலை மூடிய பின் போராட்டம் நடத்துகிறது.

கர்நாடகாவுக்கு சில தொழில் முதலீடுகள் சென்றது என்கிறார்கள். யார் என்ற விவரம் சொல்லலாமே. தொழிற் சாலைகளுக்கு சாலை வசதி முக்கியம். கோவையில் இருந்து சாம்ராஜ் நகர் செல்லும் சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டாலும் போக்குவரத்து நின்றுவிடுகிறது. இந்த நிலையில் கர்நாடகா சாலைகள் இருக்கும் போது, அங்கே யார் முதலீடு செய்வார்கள்? உண்மையில் கர்நாடகாவில் இருந்துதான், ஆந்திராவுக்கு தொழிற்சாலைகள் சென்றுள்ளன. அங்கு தினமும் 4 மணி நேரம், 6 மணி நேரம்தான் மின்சாரம் உள்ளது.

குஜராத்தில் இருந்து வந்த அமைச்சர் கூட குஜராத்துக்கு தொழில் தொடங்க வாருங்கள் என்று சொல்லவில்லை. குஜராத் தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடுக்கு வந்து, அங்குள்ள தொழிலதிபர்களை உங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க அழைத்து செல்லுங்கள் என்று தான் கூறுகிறார். 2010-ல் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பெட்டி தொழிற்சாலையை ஆந்திராவில் திமுக ஆட்சியில் தான் அமைத்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 2,542 ஜப்பானிய நிறுவனத்தில் தமிழகத்தில் மட்டும் 523 நிறுவனங்கள் உள்ளன. குஜராத்தில் வெறும் 84 நிறுவனங்களே உள்ளன. சில தினங்களுக்கு முன்பு கூட 4,500 கோடி ரூபாய்க்கு எம்.ஆர்.எஸ்.நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள செய்திகள் வந்துள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தொலை நோக்குப் பார்வையான 2023 திட்டத்தை, வரவிருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவேற்றும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடந்தது, அதிக முதலீடுகளைப் பெற்றது என்ற பெருமையை உருவாக்குவோம். எனவே இங்கிருந்து எந்த தொழிற்சாலையும் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x