மதக் கலவரத்தை தூண்டியதாக ஹெச்.ராஜா மீது வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதக் கலவரத்தை தூண்டியதாக ஹெச்.ராஜா மீது வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா மீது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த அப்துல்கபூர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா, சென்னையில் ஜன. 4-ல் நடைபெற்ற ஹிந்து தர்ம பாதுகாப்பு இயக்கப் பொதுக் கூட்டத்தில் பெரியார், இயேசு கிறிஸ்து, போப் ஆண்டவர், முஸ்லிம்கள் குறித்து தவறாகப் பேசியுள்ளார். அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

எனவே, ஹெச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யவும், ‘யூ டியூப்’பில் பதிவேற்றப்பட்ட அவரது பேச்சை அதில் இருந்து நீக்கவும் தமிழக காவல் துறைத் தலைவரிடம் பிப். 4-ல் புகார் கொடுத்தோம். தமிழக ஆளுநரிடமும் புகார் அளித்தோம். இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஹெச். ராஜா மீது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி. தனபாலன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘ஹெச். ராஜா பேசியது தொடர்பாக சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் கலி. பூங்குன்றன் கொடுத்த புகாரின்பேரில், இபிகோ 153 (ஏ), 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் அக். 1-ல் வழக்கு பதிவு செய்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ரத்தினம் வாதிடும்போது, ‘அப்துல்கபூர் பிப்ரவரி மாதமே புகார் அளித்தார். அதன்பிறகே கலி. பூங்குன்றன் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் கொடுக்கும் புகார் மீது விசாரித்து 7 நாட்களில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தப் புகார் மீது 7 மாதங்களுக்கு பிறகே வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்தால், முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் போலீஸார் அவ்வாறு செய்யவில்லை’ என்றார்.

இதையடுத்து, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கில் தீர்ப்பு கூறுவதை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in