

தமிழகத்தில் மின்சார கொள்முதலில் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.35 வீதம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஊழல் செய்வதாக ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் பொய் பேசுவதில் வல்லவர்களாக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் தற்போது இல்லை. வெளிநாட்டு வாழ் இந்தியராகவே மோடி இருக்கிறார். மாநிலத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டால் மத்தியில் போராடி பெற வேண்டும். கடிதமா எழுதிக் கொண்டிருப்பார்கள்? கடிதம் எழுத பன்னீர்செல்வம் எதற்கு? இந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனை கண்ணீர் வராமல் அழுவது எப்படி என 30 அமைச்சர்களுக்கும் கற்று கொடுத்ததுதான்.
பருப்பு கொள்முதலில் ஊழல், முட்டை கொள்முதலில் ஊழல், தற்போது மின்சாரம் வாங்குவதிலும் ஊழல். 3 ரூபாய் 15 பைசாவுக்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை 15 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மின்சாரம் வாங்குவதில் லஞ்சம் பெறவில்லை என சொல்ல முடியுமா? ஒரு யூனிட்டுக்கு ரூ.1.35 உங்கள் பைக்கு வந்து சேருகிறது என நான் குற்றம் சாட்டுகிறேன். முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள். 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் நம்முடைய ஆட்சிதான். அப்படி இல்லாவிட்டால் நமது ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.