Published : 09 Dec 2014 08:55 AM
Last Updated : 09 Dec 2014 08:55 AM

காவிரியின் குறுக்கே புதிய அணைகள்: கர்நாடகத்தின் செயல் இறையாண்மைக்கு எதிரானது - தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு

தீர்ப்புகளை மதிக்காமல் காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கட்டும் கர்நாடகத்தின் செயல், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளைக் கட்டுவதை தடுக்க வேண்டும். காவிரி டெல்டாவில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமாகா(மூ) சார்பில் தஞ்சை ரயிலடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை பாதுகாப்பதே தமாகா-வின் முதல் லட்சியம். தமிழக விவசாயிகளுக்கு பாதகம் வந்தால், சோதனை வந்தால் தடுத்து நிறுத்தும் முதல் இயக்கமாக தமாகா இருக்கும்.

காவிரியில் அணைகளை கட்ட முயலும் கர்நாடகத்தின் செயல் உச்ச நீதிமன்ற, நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது, நீதிக்குப் புறம்பானது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதுகுறித்து தமிழக அரசு, பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். பிரதமர் இதில் உடனடியாகத் தலையிட்டு கர்நாடகம் அணைகள் கட்டும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

காவிரி டெல்டாவில் மீத்தேன் எரிவாயு எடுத்தால் வேளாண்மை முற்றிலும் அழிந்துவிடும். எனவே, இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு அறிவித்த ஆய்வுக்குழுவின் முடிவை உடனடி யாக வெளியிடவேண்டும்.

விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.3,000 விலை அறிவிக்கவேண்டும். ரூ.2,000 கோடி யில் காவிரி பாசன ஆறுகளில் மேற்கொள்ளவுள்ள மேம்பாட்டுப் பணிகளைக் கண்காணிக்க விவசாயிகள் அடங்கிய குழுவை அமைக்கவேண்டும் என்றார் வாசன்.

முன்னதாக, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாலசுப்பி ரமணியன், வேலூர் ஞானசேகரன், ஜி.ரங்கசாமி மூப்பனார், எம்எல்ஏ என்.ஆர்.ரங்கராஜன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா முன்னாள் எம்பி-க்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமாகா(மூ) கட்சி தொடங்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் ஆர்ப் பாட்டம் என்பதால் நூற்றுக் கணக்கான வாகனங்களில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் குவிந் ததால் ரயிலடி மற்றும் காந்திஜி சாலை பகுதி சுமார் 4 மணி நேரம் ஸ்தம்பித்தது.

‘நமது படை கர்நாடகம் செல்லும்’

முன்னாள் எம்எல்ஏ டாக்டர் மாசிலாணி கர்நாடகத்தை கண்டித்து பேசிக்கொண்டிருந்தபோது, குறுக் கிட்ட ஜி.கே.வாசன், “கர்நாடகம் அணைகள் கட்ட நினைத்தால் நமது படை கர்நாடகத்துக்குச் செல்லும்” என்றவுடன் பலத்த கரவொலி எழுந்தது.

அடுத்துப் பேசிய முன்னாள் எம்பி வெங்கடேசன், “ஜி.கே.மூப்பனார் சோதனைகள் வந்தபோது ராஜ தந்திர ரீதியில் செயல்பட்டு எதிரிகளை பணிய வைத்ததுபோல, வாசனும் செயல்பட்டு இப்பிரச் சினையைத் தீர்த்து வைப்பார்” என்றார்.

பின்னர் பேசிய வாசன், “கட்சியின் தலைவர் என்ற முறையில் மற்றவர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளை பின்பற்றுவேன். இரு மாநில மக்களின் நல்லுறவு நமக்கு முக்கியம், அதே நேரத்தில் காவிரியைப் பாலைவனமாக்க விடமாட்டோம்” என்றார்.

விவசாயிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் ‘2016 தேர்தலில் தமாகா வெல்லும்’, ‘வருங்கால முதல்வர்’ வாசன் என்று குறிப்பிடத் தவறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x