ரத்தக் குழாய் அடைப்பால் கால் பாதிப்பு 2-வது பைபாஸில் குணமான தொழிலாளி: சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் சாதனை

ரத்தக் குழாய் அடைப்பால் கால் பாதிப்பு 2-வது பைபாஸில் குணமான தொழிலாளி: சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் சாதனை
Updated on
2 min read

பீடி, சிகரெட் பழக்கத்தால் கூலித் தொழிலாளியின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கால்களுக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவருக்கு சென்னை பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை யில் 2 பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து ரத்த ஓட்டத்தை டாக்டர்கள் சரிசெய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வர் சேகர் (49). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (42). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள னர். 2011-ம் ஆண்டு செப்டம்பரில் சேகரின் கால்களில் வலி ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவரது வயிற்றில் உள்ள ரத்தக் குழாய் மற்றும் அங்கிருந்து கால்களுக்கு பிரியும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. கால்களுக்கு ரத்தம் செல்லாததால், வலி ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜிப்மரில் முதல் பைபாஸ்

இதையடுத்து, அவருக்கு 2011 அக்டோபரில் பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு ஏற்பட்டி ருந்த ரத்தக் குழாயை அகற்றிவிட்டு, செயற்கை ரத்தக் குழாயை டாக்டர்கள் பொருத்தினர். அதன் பிறகு, அவரது கால்களில் ரத்த ஓட்டம் சீரானது. வலி சரியானதால், மீண்டும் கட்டிட வேலைக்கு செல்லத் தொடங்கினார்.

6 மாதங்களில் மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால் ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ரத்தக் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அவரை டாக்டர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர். கால் வலியோடு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார் சேகர். நாளுக்கு நாள் வலி அதிகமானதால் அதிக தூரம் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பன்னோக்கு மருத்துவமனையில்..

இந்நிலையில், சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத் தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேகர் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என அவரது மனைவியிடம் தெரிவித்தனர்.

ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார், துணைத் தலைவர் டாக்டர் பக்தவச் சலம், டாக்டர் அருணகிரி, மயக்க டாக்டர்கள் ஜெயராமன், மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த வாரம் பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் புதிதாக செயற்கை ரத்தக் குழாயை பொருத்தினர். அடுத்த படியாக இடது காலில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ரத்தக் குழாய் அடைப்பை சரிசெய்தனர்.

இதுதொடர்பாக டாக்டர்கள் ஜெயக்குமார், பக்தவச்சலம் கூறியதாவது: அவருக்கு ஏற்கெனவே பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு ஏற்பட்ட ரத்தக் குழாயை அகற்றிவிட்டு, செயற்கை ரத்தக் குழாய் வைத்தனர். அதன் பிறகும் பீடி, சிகரெட் பழக்கத்தை அவர் நிறுத்தவில்லை. அதனாலேயே ரத்தக் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் பைபாஸ் செய்வது மிகவும் சிக்கலானது. அதை சவாலாக எடுத்து செய்தோம்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு, அவரது கால்களுக்கு ரத்த ஓட்டம் சீரானது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் நன்றாக நடக்கலாம். கால்களில் வலி இருக்காது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகும். இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

பீடி, சிகரெட் பிடித்தால் புற்றுநோய் மட்டுமல்ல, ரத்தக் குழாய் அடைப்பும் ஏற்படும். இது பலருக்கு தெரிவதில்லை.

இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in