

பொன்னேரிக்கரை அருகே 3 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வழக்கறிஞரை தனிப்படையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, சவுக்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ். தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி வேலூர், ஆற்காடு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள சில்லரை நகை வியாபாரிகளுக்கு நகை வழங்குவதற்காக தனது உதவியாளர் காலேராம், ஊழியர் ராஜி மற்றும் ஓட்டுநர் ரவி ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்கள் நகைகளை சப்ளை செய்துவிட்டு காஞ்சிபுரம் அடுத்த செட்டியார்பேட்டை கிராமப் பகுதியில் உள்ள கடையில் நிறுத்தி டீ குடித்தனர்.
பின்னர், அங்கிருந்து புறப்பட தயாரானபோது திடீரென அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நகைக்கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கியது. அவர்கள் வைத்திருந்த 3 கிலோ நகைகள் மற்றும் ரூ.35 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து காரில் தப்பியது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடினர். இந்நிலையில், கொள்ளையில் தொடர்புடையதாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் பிரபு(28), ராஜ்குமார்(26), விழுப்புரத்தைச் சேர்ந்த கனக வேல்(27) மற்றும் சரண் ராஜ்(26),ஜோயல்பாபு(24), வினோத்(28) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப் படும் வழக்கறிஞர் ஆசைதம்பி என்பவரை தனிப்படை தேடி வந்தது. இந்நிலையில், ஆசை தம்பி குன்னூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீஸார் ஆசைதம்பியை நேற்று முன்தினம் கைது செய்தனர். காஞ்சிபுரம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரும் ஒருவர் பின், ஒருவராகத்தான் போலீஸாரிடம் சிக்கினர். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் மற்றும் தொலைபேசி சிக்னல் மூலம் மூலம் போலீஸாருக்கு துப்பு கிடைத்தது.
கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்படவில்லை. இவ்வாறு காவல்துறை வட்டாரங் கள் தெரிவித்தன.