வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
Updated on
1 min read

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். தரைக் காற்று சில நேரங்களில் பலமாக வீசும்.

தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. காரைக்கால், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை காலத்தில் இது வரை சுமார் 421.4 மி.மீ. மழை பெய் துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in