

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே குழந்தைகளை கொலை செய்து தப்பிய தந்தை தருமபுரியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நெல்லூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (42). இவரது மனைவி புனிதா. இந்த தம்பதிக்கு மெய்யரசன் (12) என்ற 9ம் வகுப்பு பயிலும் மகனும், ஜீவா (9) என்ற 4ம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஸ்ரீராமுலு நகரில் தங்கி முனியப்பன் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடன் பிரச்சினை இருந்ததாகவும், அதற்காக கடந்த சில மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் மன அழுத்தத்துடன் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புனிதா திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த முனியப்பன், குழந்தைகள் மெய்யரசன், ஜூவா இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவானார். அவரைப் பிடிக்க கிருஷ்ணகிரி எஸ்.பி. கண்ணம்மாள் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் தருமபுரி அப்பாவு நகர் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத் தக்க ஆண் உடல் கைப்பற்றப்பட்டது. தருமபுரி இருப்புப் பாதை காவல்துறையினர் இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இறந்தவரின் ஒரு கையில் புனிதா என்றும், மற்றொரு கையில் மெய்யரசன், ஜூவா என்றும் பச்சை குத்தப்பட்டிருந்தது. மேலும், அவர் அணிந்திருந்த சட்டையில், காவேரிப்பட்டிணம் டெய்லர் ஒருவரிடம் தைக்கப்பட்ட லேபிள் இருந்தது. இதன்மூலம் இறந்தவர், காவேரிப்பட்டிணத்தில் குழந்தைகளை கொன்ற தந்தை முனியப்பனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். முனியப்பனின் குடும்பத்தாரும் சடலத்தை நேரில் பார்த்து உறுதி செய்தனர். குழந்தைகளை இரவு 8 மணியளவில் கொலை செய்துவிட்டு உடனே தருமபுரி வந்துள்ளார்.
அவரது சட்டைப்பையில் இருந்த பேருந்து பயணச்சீட்டு இரவு 8.10மணிக்கு பெறப்பட்டுள்ளது. தருமபுரி வந்த அவர் இரவில் தருமபுரி வழியாக செல்லும் ரயில்களில் ஒன்றின் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். குழந்தைகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.