Published : 03 Apr 2014 10:56 AM
Last Updated : 03 Apr 2014 10:56 AM

எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

பொன்னேரி அருகே திருநங்கைகளின் வீடுகள் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, திருநங்கைகள் புதன்கிழமை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆலாடு சாலையில் வசித்து வந்தவர் சீனிவாசன் (எ) லிங்கம், பணி முடிந்து ரயிலில் மீஞ்சூர் சென்றார். அப்போது, அவர் மீது திருநங்கைகள் தாக்குதல் நடத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, சந்தியா என்ற திருநங்கை கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் வசித்து வந்த திருநங்கைகளின் குடிசைகளை கடந்த திங்களன்று மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துக் கொளுத்தினர். இந்த சம்பவத்தில், இறந்த லிங்கத்தின் உறவினர்களுக்கு தொடர் பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள `விடிவெள்ளி திருநங்கை கள் நலவாழ்வு சங்கம்’ உள்ளிட்ட ஆறு சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் புதன்கிழமை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, வங்கி ஊழியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகும், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பும், நிவாரணமும் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

தகவல் அறிந்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரூத் வெண்ணிலா அவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆட்சியரிடம் பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால், எஸ்.பி., அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x