

தூத்துக்குடி துறைமுகக்கழக முன்னாள் தலைவர் சுப்பையா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பதற்கு உதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விவி மினரல்ஸ் பங்குதாரர் வைகுண்டராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் குழுத் தலைவராக சுப்பையா இருந்தபோது, அந்தப் பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமான ரூ.8.23 கோடிக்கு சொத்து குவித்ததாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிந்தனர். சுப்பையா சொத்து குவிப் பதற்கு உதவியதாக விவி மினரல்ஸ் பங்குதாரர்களான வைகுண்ட ராஜன், அவரது சகோதரர் ஜெக தீசன் ஆகியோரும் சேர்க்கப் பட்டனர்.
இந்த வழக்கில் வைகுண்ட ராஜன், ஜெகதீசன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு ஏற்கெனவே மனு தாக்கல் செய்தனர். ஆனால் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ரூ.7.50 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. நிலம் விற்பனை என்ற பெயரில் வழிகாட்டி மதிப்பைக் காட்டிலும், 100 மடங்கு அதிகமாக கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளனர். வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளது. இதனால், மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண் டியது அவசியம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். அதில், சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கெனவே ஜாமீனில் வந்துள்ளனர். எனவே, எங்களுக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்க லிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகுண்ட ராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் ஆர்.ஆனந்த், ‘வழக்கில் பல்வேறு ஆவணங்களை சேர்க்க வேண்டியதுள்ளது. எனவே, விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்’ என்று கேட்டார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர். சுவாமிநாதன், ‘ஏற்கெனவே மனுதாரர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி யுள்ளது. இருவரும் செல்வாக்கு மிக்கவர்கள். எனவே, வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது. மனுதாரர் களின் முன்ஜாமீன் மனுவை ஏற்கெனவே தள்ளுபடி செய்த இந்த நீதிமன்றத்திலேயே, மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது’ என்றார்.
பின்னர், விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதேபோல், தங்கள் மீதான சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரி வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரும் தனியாக மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை நவ. 22-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.