Published : 06 Dec 2014 03:25 PM
Last Updated : 06 Dec 2014 03:25 PM

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு பர்கூரில் சிறப்பு பொருளாதார மண்டலம்: ஏற்றுமதி வளாகத்தின் மேம்பாட்டு வளர்ச்சி ஆணையர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் சார்பில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.

இதில் பங்கேற்ற, சென்னையில் உள்ள மெட்ராஸ் ஏற்றுமதி வளாகத்தின் மேம்பாட்டு வளர்ச்சி ஆணையர் சவுத்திரி பேசும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், சிறப்பு பொருளாதார மண்டலம் பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் மூலம், இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும்.

தமிழகத்தில் உள்ள 56 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 36 செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களை மையமாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். தமிழகத்தில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருந்த சிறப்பு பொருளாதார மண்டல முதலீடு, 36 ஆயிரத்து 560 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே போல், 2010 - -11 ம் ஆண்டில், சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம், 86 ஆயிரத்து 536 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். அதுவே, 2013-14 ம் ஆண்டில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2009 - 10 ம் ஆண்டில், 36 ஆயிரத்து 124 கோடியாக இருந்த ஏற்றுமதி, 2013- - 14 ம் ஆண்டு, 70 ஆயிரத்து, 627 கோடியாக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக உள்ள கிரானைட் தொழிற்சாலைகளை, ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க உள்ளோம். இதற்காக பர்கூரில் 379 ஏக்கர் பரப்பளவில், 5 கோடியே 44 லட்சம் செலவில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதனால், கிரானைட் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x