Published : 04 Dec 2014 10:22 AM
Last Updated : 04 Dec 2014 10:22 AM

சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைத்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை ஓரங்கள், நடைபாதை கள், சாலைகளின் நடுவே உள்ள தடுப்புகளில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரத் தட்டிகள், பிளக்ஸ் போர்டுகள் போன்றவைகள் வைக்கப்படுகின்றன. இதனால், வாகனங்களில் செல்வோருக்கும், நடந்து செல்பவர்களுக்கும் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக, சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உத்தரவிடக் கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோத மாக டிஜிட்டல் பேனர்கள் வைப் பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். டிஜிட்டல் பேனர்கள் வைக்காமல் இருப்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்று ஜனவரி 9-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றவில்லை என்றும் அவர்களை தண்டிக்க வேண் டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை நேற்று விசாரித்தது.

“சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவதற்கு அதிகாரிகளே முழு பொறுப் பாவார்கள். டிஜிட்டல் பேனர்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை தலைவராகவும், ஐஏஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.ஜீவரத்தினம், பி.ஏகாம்பரம் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்கிறோம். இந்தக் குழு பிப்ரவரி 26-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மற்றொரு வழக்கில் யாத்ரா மீடியா, கே.கே.எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் மூலம் தாங்கள் விளம்பரம் செய்யும் உரிமையில் மாநகர காவல்துறை ஆணையர் தலையிடக்கூடாது என்று கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சென்னை ராஜா அண்ணாமலைபுரம், துர்காபாய் தேஷ்முக் சாலையில் மேற்கண்ட நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பர போர்டுகளை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு நோட்டீஸ் தராமல் அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கலாம்” என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x