

மேட்டூர்: மேட்டூர் அருகே கொளத்தூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 2,500 வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. பல லட்ச ரூபாய் நஷ்டம் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அருகே கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட லக்கம்பட்டி, சின்னத்தண்டா, பெரிய தண்டா, நீதிபுரம், தார்காடு, கருங்கலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை விவசாயம் சாகுபடி செய்திருந்தனர். இங்கு பூவன், மொந்தம், கதலி, செவ்வாழை ரகத்தை சேர்ந்த வாழைகள் உள்ளன.
இந்நிலையில், கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, எருதுகாரனூர், கருங்கல்லூர், தெலுங்கனூர் பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2,500 வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள் மயில்சாமி, சதீஸ், தங்கவேல், மாணிக்கம், சதாசிவம், பெரியசாமி,சக்தி ஆகியோரின் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “தண்ணீரை விலைக்கு வாங்கி வாழை விவசாயம் செய்துள்ளோம். இரவு வீசிய சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளதால் கடனை கட்டுவது என்று தெரியவில்லை. எனவே, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அரசிடம் இருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.