

சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இரண்டு நாட்களில் 2.47 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
2,092 பேருந்துகள் இயக்கம்: அந்த வகையில் கடந்த ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தினமும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கடந்த 9-ம் தேதி கூடுதலாக 614 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
712 சிறப்பு பேருந்துகள்: அதன்படி அன்றைய தினம் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 2,706 பேருந்துகளில் மொத்தம் 1 லட்சத்து 21,770 பேர் பயணம் செய்துள்ளனர். இதேபோல நேற்று முன் தினம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 712 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,804 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த பேருந்துகளில் 1 லட்சத்து 26,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர், கடந்த ஜன.9 மற்றும் 10 ஆகிய 2 நாட்களில் மொத்தம் 5,510 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2 லட்சத்து 47,180 பயணிகள் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் வரும் 14-ம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. இன்று (ஜன.12) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2200 பேருந்துகள் என மொத்தம் 4,292 பேருந்துகளும், நாளை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2,790 பேருந்துகள் என மொத்தம் 4,882 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இதுவரை சென்னையிலிருந்து 2 லட்சத்து 18,900 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.