

உணவு, காற்றோட்டம் இல்லாமல் நெருக்கமாக கன்டெய்னரில் அடைத்து இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகள்.
செங்கல்பட்டு: இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து செயல்பட்டு, சரக்கு லாரியில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட 25 மாடுகளை மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே நேற்று முன்தினம் மாலை நீட்டிக்கப்பட்ட சரக்கு பெட்டகத்துடன் கூடிய லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அந்த லாரியின் பின்புறத்திலிருந்து சாணம் மற்றும் சிறுநீர் வெளியேறியதைக் கவனித்த சாய் விக்னேஷ் என்பவர், அதில் மாடுகள் அடைத்து கொண்டு செல்லப்படுவதை சந்தேகித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் லாரியை விரட்டிச் சென்று பழவேலி அருகே மடக்கிப் பிடித்தனர். லாரியை சோதனையிட்டபோது, அதில் 25 மாடுகள் மிகவும் நெருக்கமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு இறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக ஓட்டுநர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
லாரிக்குள் மாடுகள் நிற்பதற்கும், நகர்வதற்கும் போதிய இடமின்றி ஒன்றின் மீது ஒன்று விழுந்த நிலையில் இருந்தன. அவற்றின் மூக்கணாங்கயிறுகள் லாரியின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்ததாகவும், உணவு, குடிநீர், காற்றோட்டம் இல்லாததால் மாடுகள் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோசாலையில் ஒப்படைப்பு இதையடுத்து மீட்கப்பட்ட 25 மாடுகளும் உடனடியாக மருத்துவ சிகிச்சை, பராமரிப்புக்காக கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
இது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பான ஆல்மைட்டி அனிமல் கேர் அறக்கட்டளை சார்பில் போலீஸில் புகார் அளித்து, மாடுகளைத் துன்புறுத்தி கொண்டு சென்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.