Published : 05 Dec 2014 10:15 AM
Last Updated : 05 Dec 2014 10:15 AM

பன்னீர்செல்வம் நடத்துவது பினாமி ஆட்சிதான்: வெளிநடப்பு செய்தபின் ஸ்டாலின் பேட்டி

‘மக்களின் முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என அமைச்சர்கள் கூறுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது பினாமி ஆட்சிதான்’ என்று திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டி இருப்பதால் குறைந்தது 5 நாட்களாவது பேரவையை நடத்த வேண்டும் என்று அலுவல் ஆய்வுக்குழுவில் எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. 3 நாட்கள் மட்டுமே சபையை நடத்துவது என்று முடிவு எடுத்துள்ளனர்.

பேரவையிலும் இதுபற்றி வலியுறுத்தினோம். காவிரி டெல்டா விவசாயிகள் போராட்டம், முல்லை பெரியாறு விவகாரம், தருமபுரியில் குழந்தைகள் இறப்பு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக கூட்டத் தொடரை நீடிக்க வேண்டும் என கேட்டோம். அதுபற்றி பேச பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள், ‘மக்களின் முதல்வரிடம் பேசிவிட்டு முடிவு எடுக்கப்படும்’ என்று கூறுகின்றனர். நான் முன்பே கூறியபடி முதல்வர் பன்னீர்செல்வம் பினாமி ஆட்சிதான் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மோகன்ராஜ் (தேமுதிக):

மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கூட்டத்தொடரை 7 முதல் 10 நாட்கள் வரை நடத்த வற்புறுத்தினோம். பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம். காவிரி டெல்டாவில் 500 இடங்களில் மறியல் நடப்பது பற்றி பேசக்கூட அனுமதிக்கவில்லை. அமைச்சர்கள், அதிமுக உறுப்பினர்கள் எல்லோரும் ‘மக்களின் முதல்வர்’ என்றுதான் பேசுகிறார்களே தவிர, ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் முதல்வர் என்று குறிப்பிடவில்லை.

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்):

உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு காவிரி அருகே புதிய அணைகள் கட்டுவதை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதியோர் ஓய்வூதியம் நிறுத்தம், குழந்தைகள் இறப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என கேட்டோம். பேரவைத் தலைவர் ஏற்காததால் வெளிநடப்பு செய்தோம்.

அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):

பேரவைக் கூட்டத்தை 3 நாட்கள் மட்டுமே நடத்துவது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய கோரினோம். அது தொடர்பாக பேசவே அனுமதிக்கவில்லை. அரை மணி நேரம் போராடியும் எந்தப் பலனும் இல்லை. இது ஜனநாயக விரோத செயல் ஆகும். எனவே, நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

விஜயதாரணி (காங்கிரஸ்):

சட்டப்பேரவை கூட்டத்தை நீட்டிக்க வேண்டும். மக்கள் பிரச்சினையை பேச அனுமதிக்காமலேயே கூட்டம் நடத்தப்படுகிறது. ஆவின், தனியார் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, குழந்தைகள் இறப்பு குறித்து பேசவும் அனுமதிக்க வேண்டும். இதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் என்.ஆர்.ரெங்கராஜன் (பட்டுக்கோட்டை), ஜாண் ஜேக்கப் (குளச்சல்) ஆகியோர் வாசன் தொடங்கியுள்ள தமாகாவில் உள்ளனர். நேற்று பேரவைக்கு வந்த இருவரும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபோது, இவர்கள் தனியாக வெளியேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x