

கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில், பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள் ஏ.சாந்தி, கே.சி.கவிதா, வி.அனுராதா, எம்.மரகதம், கே.அன்னபூரணி, எல்.ரேவதி, எஸ்.உமா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
‘‘கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 90 மாணவிகளும், 61 மாணவர்களும் பயில்கின்றனர். 8 ஆசிரியைகளும், ஒரு தலைமை ஆசிரியர் எம்.கே.பீம்குமார் என்பவரும் பணிபுரிகின்றனர். ஜெ.ரோசி என்ற ஆசிரியை கடந்த செப்டம்பர்
26-ம் தேதிதான் பணியில் சேர்ந்தார். அவரைத் தவிர மற்ற ஏழு ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் அடிக்கடி பலவழிகளிலும் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். வீட்டுக்குப் போன பிறகும் செல்போனில் தொடர்பு கொண்டு தகாத முறையில் பேசுகிறார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்தோம். அதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மைக் கல்வி அதிகாரி தனி அலுவலர், ஊர் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் சமரசமாக பேசி ஒரு வாரத்தில் தலைமை ஆசிரியரை மாற்றித் தருகிறோம் என்று வாய்மொழி உத்தரவு கொடுத்தனர். ஆனால், இதுவரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தலைமை ஆசிரியர் பீம்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இந்த வழக்கை விசாரித்து, பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 22-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.