Published : 08 Dec 2014 12:49 PM
Last Updated : 08 Dec 2014 12:49 PM

பகவத் கீதை விவகாரம்: மோடிக்கு கருணாநிதி எச்சரிக்கை

தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்படும் என்ற சுஷ்மா ஸ்வராஜ் பேச்சை திமுக கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள கருணாநிதி, இதுபோல் மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடப்பது, வளர்ச்சிப் பணிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று பிரதமர் மோடிக்கு எச்சரித்துள்ளார்.

பகவத் கீதை தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்ற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கருத்தை சுட்டிக் காட்டி, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

"மத்திய அரசில் பா.ஜ.க. பொறுப்பேற்றதற்குப் பிறகு, சமூக வலைத் தளங்களில் கட்டாயம் "இந்தி" என்று தொடங்கி, "குரு உத்சவ்" என்று விழா எடுத்து, பாடமொழியாக "சமஸ்கிருதம்" என்று அறிவித்து, "இந்தியா இந்துக்கள் தேசமே" என்ற பேச்சுகளுக்கெல்லாம் இடம் கொடுத்து, மத்திய அமைச்சர் ஒருவரே அவசரப்பட்டு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்து, அதற்காக பிரதமரே வருத்தம் கலந்த தொனியில் சமாதானம் செய்து பதில் கூறுகின்ற அளவுக்கு நிலைமை மாறி, இப்போது அடுத்த கட்டமாக "பகவத் கீதை" தேசியப் புனித நூலாக அறிவிக்கப்படுவதாக உள்ளது என்றும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு "வம்பை" விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

டெல்லியில் 7-12-2014 அன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால், "இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தேசியப் புனித நூலாக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அறிவிக்கவேண்டும்" என்று பேசியதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், "பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற போது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பக்வத் கீதையைத் தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசியப் புனித நூல் தகுதி வழங்கப் பட்டு விட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்பு தான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்படவில்லை என்றும், அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு விடும் என்றும் பேசியிருக்கிறார்.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற குடியரசு என்று தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் "இந்து" மதம், "இஸ்லாமிய" மதம், "கிறித்தவ" மதம் "சீக்கிய" மதம், "ஜைன" மதம் போன்ற பல்வேறு மதங்கள் இருந்தாலும், அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்து மதச் சார்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அடிப்படை கோட்பாடாக இருந்திட வேண்டும்.

பல்வேறு மொழிகள், கலாச்சார பாரம்பரியங்கள், இனவேறுபாடுகள் இந்தியாவில் இருப்பதால்தான் இது பன்முகம் கொண்டு பரந்து விரிந்த நாடு; இங்கு சமத்துவமும், சமதர்மமும் போற்றப்பட வேண்டும் என்பது தான் அடிப்படைக் கொள்கையாக அமைந்திட வேண்டும்.

ஜனநாயகத்தில் அரசியலமைப்புச் சட்டம் தான் புனித நூலாகும் என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது கண்டனத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்துக்கு எதிராகத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது "அர்த்தமற்ற" கருத்து என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. அரசு பல்வேறு வகையில் மக்கள் நலம் பேணும் செயல்களில் ஈடுபட்டாலும் இது போன்ற தேவையற்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபடுவதன் மூலம் அதன் பெயரைக் கெடுத்துக் கொள்கிறதோ என்றும், பா.ஜ.க. அரசு முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், பின்னோக்கி இரண்டு அடிகள் வைக்கிறதோ என்று நடுநிலையாளர்கள் எண்ணுகின்ற முறையில் தான் நடைபெறுகிறது என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய இப்படிப்பட்ட கருத்துகளை ஒவ்வொருவரும் எழுப்பி மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடந்து வளர்ச்சிப் பணிக்குக் குந்தகம் ஏற்படுத்தாதவாறு மிகுந்த எச்சரிக்கையோடு மத்திய அரசை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்துவோடு, தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்படும் என்ற வெளியுறவுத் துறை அமைச்சரின் பேச்சுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x