Published : 19 Dec 2014 22:13 pm

Updated : 19 Dec 2014 22:13 pm

 

Published : 19 Dec 2014 10:13 PM
Last Updated : 19 Dec 2014 10:13 PM

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) இன்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

தமிழ் இதழியலின் முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனைத் தொடங்கியவர் இவர்தான். மிகத் துணிச்சலான கட்டுரைகளைத் தாங்கி வந்து, ஜூனியர் விகடன் இதழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏராளமான புலனாய்வு இதழ்கள் வெளிவருவதற்கு முன்னோடியாக விளங்குகிறது.

1987-ம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர். அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார்.

பத்திரிகைகள் சிகரெட் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘விகடனில் சிகரெட் விளம்பரங்களை வெளியிடுவது இல்லை’ எனக் கொள்கை முடிவு எடுத்து உறுதியுடன் அமல்படுத்தினார். இன்றளவும் அந்தக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழ் இதழியலில் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய ‘விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்’, விகடன் நிறுவனர் அமரர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களால் துவங்கப்பட்டது. எனினும், அதற்கு முழுமையான வடிவம் கொடுத்து திட்டத்தை மேலும் மெருகூட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான முயற்சியாக இப்போதும் பேசப்படும் ‘முத்திரைக் கதைகள்’ திட்டத்தைத் துவங்கியவர் இவர்தான். ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கு முதல் களம் அமைத்துத் தந்தவர். திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவித்த பண்பாளர். இவரும் ஓர் எழுத்தாளரே. ‘சேவற்கொடியோன்’ என்ற புனைப்பெயரில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

தந்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களின் வழியைப் பின்பற்றி திரைத்துறையிலும் முத்திரை பதித்த திரு எஸ்.பாலசுப்ரமணியன் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, முத்துராமன் நடித்த ‘எல்லோரும் நல்லவரே’ போன்றவை இவர் இயக்கிய சில படங்களாகும்.

விவசாயத்தின் மீதும், பறவைகள் மீதும் தீராத காதல்கொண்ட இவர், ஏராளமான அரியவகை வெளிநாட்டுப் பறவைகளை வளர்த்து வந்தார்.

இவருக்கு ஆறு மகள்கள், ஒரு மகன். இவரது மகன் பா.சீனிவாசன் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைவுவிகடன் பத்திரிகைதமிழ்நாடுசென்னை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author