கருணைக் கொலைக்கு மனு: கோமாவில் இருந்த பெண் மரணம்

கருணைக் கொலைக்கு மனு: கோமாவில் இருந்த பெண் மரணம்
Updated on
1 min read

ஏழரை மாதங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கன்னக்கோடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (35). இவரது மனைவி சீதாலட்சுமி (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. தைராய்டு பாதிப்பு ஏற்பட்டிருந்த சீதாலட்சுமிக்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் 2-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தவறான சிகிச்சையால், கோமா நிலைக்குச் சென்றார் சீதாலட்சுமி. பல மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தும் பலனில்லை.

இதையடுத்து, நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சீதாலட்சுமி கடந்த மே 1-ம் தேதி சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், மனைவியை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி முதல்வர் தனிப்பிரிவில் சுப்பிரமணியம் மனு கொடுத்தார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. முதல்வர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர், சீதாலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

கடந்த ஏழரை மாதங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சீதாலட்சுமி நேற்று மாலை 4.30 மணி அளவில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் சீதாலட்சுமி சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. யாராவது கூப்பிட்டால் லேசாக திரும்பிப் பார்ப்பார். அவ்வளவுதான். மற்றபடி அவரிடம் எந்த உடல் அசைவும் இல்லை. தற்போது இறந்துவிட்டார்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in