Published : 16 Dec 2014 08:32 AM
Last Updated : 16 Dec 2014 08:32 AM

கிரானைட் குவாரிகளில் மனநோயாளிகள் உட்பட பலர் நரபலி?- சகாயத்திடம் குவாரி ஓட்டுநர் அளித்த புகாரால் பரபரப்பு

கிரானைட் குவாரிகளில் மன நோயாளிகள் உட்பட பலர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்திடம் குவாரியில் டிரைவராகப் பணியாற்றியவர் புகார் அளித்துள்ளது விசாரணையில் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.

மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள முறை கேடுகள் குறித்து டிச. 3, 4 தேதிகளில் மதுரையில் விசாரணை நடத்திய சகாயத்திடம் 111 மனுக்கள் வழங்கப்பட்டன. திங்கள்கிழமை 2-ம் கட்ட விசாரணையை சகாயம் தொடங்கினார்.

மேலூர் அருகே சோமநாத புரத்தை சேர்ந்த பாண்டிச்செல்வி கொடுத்த புகாரில், தனது கணவர் கருப்பசாமி பிஆர்பி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றினார். 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் திடீரென இறந்துவிட்டதாக தெரி வித்தனர். உடலைக்கூட பார்க்க விடவில்லை. கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனத் தெரிவித் துள்ளார்.

மனநோயாளிகள் நரபலி

கீழவளவு அருகே கம்பர்மலைப் பட்டி சேவற்கொடியோன் கொடுத்த புகாரில், பிஆர்பி குவாரியில் 5 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றினேன். ஒடிசா, பிஹார், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தலித் சமூகத்தினரை மூட நம்பிக்கையின் அடிப்படையில் நரபலி கொடுத்தனர். இதற்கு தொழிலாளர்களை அழைத்துவரும் ஏஜெண்டுகள் உடந்தையாக செயல்பட்டனர். விபத்தில் இறந்து விட்டதாகக் கூறி உடலை கொடுத்தனுப்பினர். இதில் பிரச்சினைகள் ஏற்பட்டதால், சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப் பட்டவர்களை சாப்பாடு கொடுத்து அழைத்து வருவர்.

புதிய கிரேன், பொக்லைன், குவாரிகள் செயல்படும்போது கேரளத்திலிருந்து மந்திரவாதிகளை அழைத்துவந்து மனநலம் பாதித் தவர்களை நரபலி கொடுப்பர். நான் புதுக்கோட்டை பிஆர்பி குவாரியிலிருந்து வரும்போது மேலாளர் அய்யப்பன் என்பவர் மனநலம் பாதித்த 2 பேரை நான் ஓட்டிவந்த காரில் ஏற்றிவந்து நரபலி கொடுத்தார்.

கரூர் மாவட்டம் தோகைமலையில் இருந்து அனுமந்தன் என்பவர் மனநலம் பாதித்த 2 பேரை நான் ஓட்டிவந்த ஜீப்பில் ஏற்றி வந்து நரபலி கொடுத்தனர். அடுத்த 2 நாளில் தூத்துக்குடியிலிருந்து மனநலம் பாதித்த ஒருவரை அனுமந்தன் அழைத்துவந்தார். அவரும் நரபலி கொடுக்கப்பட்டார். மற்றொரு மேலாளர் ஜோதிபாசு புதுக்கோட்டை பகுதியிலிருந்து ஒரு மனநலம் பாதித்தவரை அழைத்துவந்து அன்னவாசல் குவாரியில் இருந்த முருகேசனிடம் காண்பித்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால், உனக்கும் இதே நிலைமைதான் எனக்கூறி என்னை மிரட்டினார். கீழவளவு கல்லுதின்னி சேகர் என்பவர் மனநலம் பாதித்த ஒருவரை அழைத்து வந்து ஜோதிபாசுவிடம் ஒப்படைத்தார். இப்படி பலர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் இயக்கம் சார்பில் உலக மனித உரிமை பாதுகாப்பு மையத்துக்கும், குடியரசுத் தலைவர், பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளோம். பொதுநலன் கருதி இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித் திருந்தார். இது குறித்து நீதி மன்றத்தில் தெரிவிக்கப்படும் என சகாயம் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சேவற்கொடியோன் கூறுகையில், நரபலி குறித்து காவல் துறையினர் கேட்டாலும் தகவல் அளிக்க தயாராக உள்ளேன் என்றார்.

சிறுமி நரபலியில் பொய் வழக்கு

புதுதாமரைப்பட்டியை சேர்ந்த ரவி கொடுத்த புகாரில், ‘குவாரி யில் சிறுமி ஒருவர் நரபலி கொடுக் கப்பட்டார். இதில் அதிகாரிகள் தூண்டுதலில் என்மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு பதிந்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

உண்மையான குற்றவாளி யார் என்றும், நரபலி கொடுத்தது ஏன் எனவும் கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார்கள் வந்ததால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பலர் நிலத்தை மிரட்டி வாங்கியதாவும், பேசியபடி பணம் வழங்கவில்லை என்றும் புகார்களை அளித்தனர்.

சகாயம் ஆதரவு கமிட்டி தலைவர் சோமசுந்தரம் அளித்த புகாரில், ‘குவாரி முறைகேட்டுக்கு உடந்தை யாக இருந்த அதிகாரிகள், புரோக் கர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், பினாமிகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித் துள்ளார்.

ஆர்டிஓ செந்தில்குமாரி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆவணங்கள் தாக்கல் செய்தனர். இவர்களிடம் கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தினார். இன்றும் மனுக்கள் பெறப்படுகின்றன.

கிரானைட் முறைகேடு தொடர்பாக உ.சகாயத்திடம் புகார் அளிக்கும் பெண் போலீஸார். (அடுத்த படம்) விசாரணைக்காக ஆவணங்களைக் கொண்டு செல்லும் அரசு ஊழியர்கள்.

4 பெண் போலீசார் புகார் மனு

மதுரை நகரில் பணியாற்றும் எஸ்ஐ.க்கள் சாந்தி, விஜயாள், மைக்கேல் ஜெரால்டு, தலைமைக் காவலர் நிர்மலா உட்பட 5 பேர் மனு அளித்தனர். இவர்கள் சகாயத்திடம் கூறுகையில்,‘திருமோகூரில் 2001-ல் ஒரு சென்ட் ரூ.35 ஆயிரத்துக்கு வீட்டுமனை வாங்கினோம். தங்கள் நிலம் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்கக்கூட முடியாத அளவுக்கு கிரானைட் குவியலை கொட்டிவிட்டனர்.

பின்னர் கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் எனக்கூறி முத்துக்குமார் என்பவர் எங்களை மிரட்டி 2007-ல் சென்ட் ரூ.55 ஆயிரத்துக்கு வாங்கினார். வாங்கிய பணத்தை கொடுத்துவிடுகிறோம், நிலத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக சகாயம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x