

மதமாற்ற சம்பவங்களுடன் பாஜகவுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ தொடர்பு இல்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிருபர்களிடம் கூறியதாவது:
வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் என்ற நரேந்திர மோடி அரசின் செயல்திட்டங்களை தடம் புரளச் செய்யும் நோக்கத்தில் மதமாற்ற விவகாரத்தை சில எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பு கின்றன. முக்கிய மசோதாக்களை நிறைவேற விடாமல் முடக்கி யிருப்பதன் மூலம் அவை மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகின்றன. என்றாலும் இந்த நிலை மாறி, இன்சூரன்ஸ் மசோதா, நிலக்கரி மசோதா, டெல்லி சிறப்பு சட்டங்கள் மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் என நம்புகிறேன்.
நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவதே அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க் கிழமை (இன்று) கூடி, தற்போதைய நிலவரம் குறித்து ஆராயும். குளிர்கால கூட்டத் தொடரை நீட்டிக்கலாமா என்பது குறித்து இதில் முடிவு எடுக்கப்படும்.
டெல்லி சிறப்பு சட்டங்கள் மசோதா நிறைவேறாவிட்டால் டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் குடியிருக்கும் இடங்களில் இருந்து அப்புறப் படுத்தப்படுவார்கள். இந்த மசோதாக்களின் முக்கியத்து வத்தை புரிந்துகொள்ளுங்கள் என்று காலையில் கூட மாநிலங் களவை தலைவர் அறையில் எதிர்க் கட்சிகளை கேட்டுக்கொண்டேன்.
19-ம் நூற்றாண்டில் இருந்தே மதமாற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. துரதிருஷ்டவசமாக சில ஊடகங்கள் மட்டும் தற்போது இப்பிரச்சினையை எழுப்புகின்றன.
மதமாற்ற சம்பவங்களையோ மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி களையோ மத்திய அரசோ, பாஜகவோ ஆதரிக்கவில்லை. இந்த சம்பவங்களுடன் மத்திய அரசுக்கோ, பாஜகவுக்கோ தொடர்பு இல்லை. தனிப்பட்ட முறையில் சிலர் இவற்றை செய்கிறார்கள்.
மத்திய அரசை பொறுத்தவரை சட்டம் தெளிவாக உள்ளது. எங்கேயாவது கட்டாய மதமாற்றம் நடந்தாலோ அல்லது மதம் மாறுமாறு தூண்டினாலோ மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு எடுக்க முடியாது.
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய கேரள மற்றும் உத்தரப்பிரதேச உறுப்பினர் களிடம் இதைத்தான் நான் கூறினேன்.
மதமாற்ற விவகாரத்தை அவையில் எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அது தொடர்பான விவாதத்துக்கு தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்கு வங்கி அரசியல் அந்தக் கட்சியைதான் பாதிக்கும்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.