Last Updated : 25 Dec, 2014 09:50 AM

 

Published : 25 Dec 2014 09:50 AM
Last Updated : 25 Dec 2014 09:50 AM

நூற்றாண்டு விழா கொண்டாடும் விருதுநகர் நகராட்சி: உரிய நிதி கிடைக்காததால் மேம்பாட்டுப் பணிகள் முடக்கம்

நூற்றாண்டு விழா கொண்டாடும் விருதுநகர் நகராட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நிதியை தமிழக அரசு இதுவரை வழங்காததால் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த ஊரான விருதுபட்டி என்று அழைக்கப்பட்டு வந்த விருதுநகர், மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விற்பனைக்கான முக்கிய வர்த்தக நகரமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து விளங்கி வருகிறது.

13.3.1915 அன்று 3-ம் நிலை நகராட்சியாக விருதுநகர் அறிவிக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சியின் முதல் நகர்மன்றத் தலைவராக எப்.எச். சீரக் பொறுப்பு வகித்தார். அவரைத் தொடர்ந்து 2-வதாக 1921- 1926 காலங்களில் எம்எஸ்பி. செந்தில்குமாரநாடார் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இவரது காலத்தில்தான் தற்போ துள்ள நகராட்சி அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டது.

3-வது நகர்மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்த பிஎன்ஏ. முகம்மது இப்ராகிம் ராவுத்தர் காலத்தில் விருதுநகர் நகர மக்களின் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க சிவகாசி அருகேயுள்ள ஆணைக்குட்டம் கண்மாய் பகுதியிலிருந்து மாட்டுவண்டிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

படிப்படியாக பல்வேறு வளர்ச்சிகளை எட்டி வரும் விருதுநகர் நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதன் நினைவாக 2014-15 ஆம் ஆண்டை நூற்றாண்டு விழாவாக அறிவித்து சிறப்பாகக் கொண்டாட விருதுநகர் நகராட்சித் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, நகரின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, தெருவிளக்குகள், குடிநீர் வசதி, சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றியும் ரூ. 73.55 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்ற விருதுநகர் நகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், விருதுநகர் நகராட்சியில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டம் ஆகிய 3 திட்டங்களின் கீழ் தமிழக அரசு ரூ. 25 கோடி மட்டும் வழங்கி 14.5.2014 அன்று ஆணை பிறப்பித்தது. இந்த நிதியைக் கொண்டு விருதுநகர் நகராட்சிப் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.

அதன்படி, ரூ. 14.20 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள், ரூ. 50 லட்சத்தில் பொதுக் கழிப்பிடங்கள், ரூ. 50 லட்சத்தில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுதல், ரூ. 1 கோடியில் நகராட்சிப் பூங்கா சீரமைப்பு, ரூ. 70 லட்சத்தில் நினைவு வளைவு மற்றும் நினைவுத் தூண் அமைத்தல், ரூ. 5 கோடியில் 3 இடங்களில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், பழைய பஸ் நிலையத்தில் ரூ. 1 கோடியில் கூடுதல் கட்டிடம் மற்றும் பயணிகளுக்கான ஓய்வு அறை கட்டுதல் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ. 2 கோடியில் கூடுதல் அலுவலகக் கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டன.

ஆனால், அரசு ஆணை பிறப்பித்து 7 மாதங்களாகியும் இதுவரை உரிய நிதி அளிக்கப்படாததால், திட்டமிடப்பட்ட எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து விருதுநகர் நகர்மன்றத் தலைவர் சாந்திமாரியப்பனிடம் கேட்டபோது, ‘ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 3 திட்டங்களின் கீழ் இந்தச் சிறப்பு நிதி அளிக்கப்படுகிறது. விரைவில் அரசிடமிருந்து நிதி பெறப்பட்டவுடன் ஒப்பந்தப் பணிகள் கோரப்பட்டு, திட்டமிடப்பட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x