

கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் குமாரவேல், பாலா, அஞ்சப்பன், சுப்பிரமணியன். இவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடற்கரையில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 படகுகளில் வந்த 40-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றி வளைத்துள்ளனர். இதில் பயந்துபோன அஞ்சப்பன், சுப்பிரமணியன், பாலா ஆகியோர் படகின் அடியில் இருந்த மறைவான பகுதியில் பதுங்கினர்.
படகில் ஓட்டுநராக இருந்த குமார வேலை இலங்கை கடற்படையினர் இரும்புக் கம்பியால் தாக்கிச் சென்றனர். அவர்கள் சென்றபின் படகில் மறைந்திருந்த மீனவர்கள், மயங்கிய நிலையில் கிடந்த குமாரவேலை மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோட்டைப்பட்டினம் மீனவர் மீது இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் நிகழ்த்திய கொடூர தாக்குதலுக்கு, புதுக்கோட்டை மீனவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.