அரசு ஒதுக்கிய நிலத்தை ரத்து செய்ததாக முன்னாள் ராணுவத்தினர் புகார்

அரசு ஒதுக்கிய நிலத்தை ரத்து செய்ததாக முன்னாள் ராணுவத்தினர் புகார்
Updated on
1 min read

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை நிலத்தை, பொய்யான தகவலின் பேரில் அரசாணை மூலம் ரத்து செய்துள்ளதாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வீட்டுமனை வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் கூறியதாவது: சோழிங்கநல்லூர் பகுதியில் கடந்த 1984-ம் ஆண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் 400 பேருக்கு தலா 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். பின்னர், பல்வேறு காரணங்களுக்காக எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

இதற்கு பதிலாக, சோழிங்க நல்லூர் கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிராம நத்தம் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், 10 ஏக்கர் நிலம் வீட்டு மனைகளாகவும், மீதமுள்ள 10 ஏக்கர் நிலம் சாலை, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்துக்காக கடந்த 2006-ல் ஆண்டு அரசால் ஒதுக்கப்பட்டது. பின்னர், கடந்த 2009-ம் ஆண்டு சோழிங்கநல்லூர் பகுதி தாம்பரம் வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிய தனி வட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சில அரசியல் வாதிகள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மனைகள் குறித்து தவறான தகவல்களை, சோழிங்நல்லூர் வட்டாட்சியரிடம் தெரிவிக்க, அவர் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை ரத்து செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். எந்த விசாரணையுமின்றி, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய விசா ரணை நடத்தி அந்த அரசாணையை ரத்து செய்யாவிட்டால், ராணுவத்தில் வழங்கப்பட்ட பதக்கங்களை அரசிடம் திரும்ப அளிப்போம் என்றனர்.

இதுகுறித்து, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சுரேஷிடம் கேட்டபோது, ‘நிலத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது போன்ற 9 நிபந்தனைகளுடன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு நிலம் வழங்கியது. ஆனால், சோழிங்கநல்லூரில் இந்த நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. அரசால் அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகளை முன்னாள் ராணுவ வீரர்கள் யாரும் பின்பற்றவில்லை. இதனால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in