

தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், மசாஜ் நிலையங்களில் போலீஸார் ரெய்டு நடத்தக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மஸ்தி, ஸ்பா ஓபுலன்ஸ் உட்பட பல்வேறு அழகு நிலையங்கள் சார்பில் 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், சென்னை போலீஸார், விபச்சார தடுப்பு போலீசார் உள்ளிட்டவர்கள், தங்களின் அழகு நிலையங்களில் நுழைந்து விசாரணை என்ற பெயரில் இடையூறு செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு:
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பியூட்டி பார்லர்கள், ஸ்பா மசாஜ் மையங் கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த மையங்களில் விபசார தடுப்புப் போலீசார் ரெய்டு நடத்துவதால், அவர்களின் தொழில் பாதிப்பதோடு, சமுதாயத்தில் அவர்கள் மீது கெட்ட எண்ணத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
23 ஸ்பாக்கள் நட்சத்திர ஓட்டல்களில் உள்ளன. ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் 9 உள்ளன. 52 சாதாரண மசாஜ் நிலையங்கள் உள்ளன என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சட்ட விரோதமான செயல் நடப்பதாக அந்த கட்டிட உரிமையாளர்கள், அருகில் வசிப்போர் போன்றவர்களிடம் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதனால் ரெய்டு செய்கிறோம் என்றெல்லாம் போலீஸார் தரப்பில் வாதிடப்பட்டது. விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 17 வழக்குகள் போட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் மசாஜ் நிலையங்களுக்கென்று தனி சட்டமே உள்ளது. எனவே இங்கும் மசாஜ் என்ற தொழிலை முறைப்படுத்துவது அவசியமாகிறது. அதற்கேற்ற சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும். எனவே, வழக்கம்போல் ரெய்டு செய்வதை போலீஸார் தவிர்க்க வேண்டும். ரெய்டு நடத்துவதற்கு அடிப்படை ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி ஆதாரம் இருக்கும்பட்சத்தில் விபசார தடுப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள அம்சத்தின்படியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.