Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

நாங்கள்தான் ‘டிரென்ட் செட்டர்’ ஆக இருப்போம்: கார்த்திக் பேட்டி

கார்த்திக் - நவரச நாயகன். சினிமாவில் மாத்திரமல்ல.. அரசியலிலும்தான்! கார்த்திக்கை கண்மூடித்தனமாக நேசிக்கும் வாக்காளர்கள் தெற்குச் சீமையில் கணிசமாக உள்ளனர். அந்த நம்பிக்கையில் தேர்தலுக்குத் தேர்தல் வந்து திகில் கிளப்பிவிட்டுப் போகும் கார்த்திக் இதோ, மீண்டும் ’பத்துத் தொகுதிகளில் போட்டி’ என்ற கோஷத்துடன் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:

உங்களின் ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யை ’நாடாளும் மக்கள் கட்சி’ என்று பெயர் மாற்றிவிட்டீர்களே.. ஏதாவது சென்டிமென்ட்டா?

அப்படி எல்லாம் எதுவுமில்லை. குறைந்தது நான்கு எம்.பி.க்கள் இருக்க வேண்டும் - அதுவும் நான்கு மாநிலங்களில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அகில இந்தியக் கட்சியாக அங்கீகரிக்க முடியும்னு சமீபத்துலதான் தேர்தல் கமிஷன்ல ஒரு ரூல்ஸ் வந்துச்சு. அந்த அடிப்படையில, அகில இந்தியக் கட்சின்னு சொல்லிக்கிறது பிரயோஜனமில்லைன்னு தோணுச்சு; அதனால மாத்திட்டோம். ஒரு மாசத்துக்குள்ள கட்சிய பதிவு பண்ணிருவோம்!

கடந்தமுறை விருதுநகர் தொகுதியில போட்டியிட்டு 17,333 ஓட்டு வாங்கிய நீங்கள், இந்தமுறை தேனியில் போட்டி யிடப் போவதாக சொல்கிறீர்கள். தேனிக்கு வருவதற்கு ஏதாவது சிறப்புக் காரணம்..?

தமிழகம் முழுவதும் எங்களுக்கு தனி செல்வாக்கு இருக்கு. சாதி கட்சிங்கிற பேரை உடைச்சாச்சு. பிற சாதியினரும் பெண்களும் எங்க கட்சியில சேர்ந்துட்டு இருக்காங்க. பத்துத் தொகுதியில் போட்டியிட முடிவெடுத் திருக்கிறோம். தென்காசி தனி தொகுதியிலும்கூட வேட்பாளரை நிறுத்துகிறோம். தேனியை நாங்க குறிவைக்கிறதுக்கு காரணம், அங்குள்ள மக்களுக்கான உரிமையை மீட்டு எடுக்க வேண்டியதிருக்கு. அதனாலதான் அங்க கவனம் செலுத்துகிறோம்.

2006 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வேட்பாளர்களை நிறுத்தியதால் தென் மாவட்டங்களில் பல இடங்களில் அதிமுக குறைவான ஓட்டுக்களில் வெற்றியை பறிகொடுத்தது. அதுபோல, இந்தமுறையும் முக்குலத்தோர் ஓட்டுக்களைப் பிரிப்பதற்காகத்தான் உங்களை சிலர் முன்னிறுத்துவதாகச் சொல்கிறார்களே..?

(பலமாக சிரிக்கிறார்) அது அப்படிச் சொல்றவங்களோட பலவீனம். நாங்க வளர்ந்துட்டு வர்றோம். இவன் வளர்கிறானேங்கிற பொறாமையில், எங்க கட்சிக்குள்ள குழப்பம் ஏற்படுத்துறதுக்காக மாற்றுக் கட்சியினர் செய்யும் விஷமப் பிரச்சாரம் இது. ஆனால், ஜனங் களோட புத்திசாலித் தனத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது.

மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது; மூன்றாவது அணி தான் ஆட்சி அமைக்கும் என்று சொல் கிறார்களே..?

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சி தான் என்று நல்லாவே தெரியுது. ஆனால், மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் நாட்டுக்கு அதைவிட பேராபத்து எதுவுமில்லை. காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ. அரசு கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்துக்கும் காரணம் கூட்டணிக் கட்சிகள்தான்.

ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால் நல்லது நடக்கும்னு டெல்லி மக்கள் ஓட்டுப் போட்டார்கள். ஆனால், அங்கே 144 தடையுத்தரவை முதலமைச்சரே மீறுகிறார். எதற்கெடுத்தாலும் ஒரு முதலமைச்சர் ரோட்டுக்குப் போகிறேன்; மக்களைச் சந்திப்பேன் என்று கிளம்புவது நாட்டுக்கு நல்லதா? தப்பித் தவறி இவர்கள் கையில் நாடாளுமன்றமும் சிக்கினால் நாடே ஸ்தம்பித்துப் போகும்.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டீர்களா?

தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சிலர் கூட்டணி பேசுகிறார்கள். எப்படிப் பட்டவர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டணி அமைக்கிறோம். இன்னும் ஒருவாரத்துக்குள் முடிவு எட்டப்பட்டுவிடும். மார்ச் 2-ல் ராஜபாளையத்தில் ’புனித மனித உரிமை விழிப்புணர்வு சந்திப்பு’ கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். மற்றவர் களைத் தாக்குவதற்காகவோ வெட்டி அரசியல் பேசுவதற்காகவோ கூட்டப்படும் கூட்டம் அல்ல அது.

நாம் யார் என்பதையும் இப்போது எப்படி இருக்கிறோம் என்பதையும் தமிழக மக்களுக்கு புரியவைக்கும் ஆக்கப்பூர்வமான கூட்டம். அன்றைய தினம், நாடாளும் மக்கள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்தும் பிரதமர் வேட்பாளராக யாரை ஆதரிக்கப் போகிறோம் என்பது குறித்தும் பிரகடனப்படுத்துவோம். இந்தத் தேர்தலில் நிச்சயம் நாங்கள்தான் ’டிரென்ட் செட்டர்’ ஆக இருப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x