Published : 10 Apr 2014 12:20 PM
Last Updated : 10 Apr 2014 12:20 PM

சென்னையில் விபத்துக்களில் 4 பேர் பலி, கடல் அலையில் சிக்கி ஒரு பெண் இறந்தார்

சென்னையில் நடந்த பல்வேறு விபத்துகளில் 5 பேர் பலியானார்கள். இதில் 3 பேரின் அடையாளம் தெரியவில்லை.

சென்னை சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரயில் சென்றது.

வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே வந்தபோது ஒரு பெட்டியின் சக்கரம் சுழலாமல் புகை வந்தது. இதை கார்டு கவனித்து தகவல் கொடுக்க, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் நிறுத்தப்பட்ட இடம் பொதுமக்கள் தண்டவாளத்தை தரைவழியாக கடக்கும் பகுதியாகும். இதனால் அந்த வழியாக வந்தவர்கள் ரயிலின் அடியில் சக்கரங்களுக்கு இடையே குனிந்து சென்றனர். கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. சிறிது நேரம் கழித்து தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் கிடந்தது தெரிந்தது.

அவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இருவரும் சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தார்களா அல்லது வேறு ஏதேனும் ரயிலில் அடிபட்டு இறந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லாரி விபத்து

பள்ளிகரணை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் செங்கோட்டையன்(37) மற்றும் ராமலிங்கம்(41). நண்பர்களான இருவரும் பள்ளிக்கரணை காவல் நிலையம் முன்பு புதன் கிழமை பிற்பகல் வேளச்சேரி பிரதான சாலையை கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்தில் இருந்து வேகமாக வந்த லாரி இருவர் மீதும் மோதியது. இதில் செங்கோட்டையனும், ராமலிங்கமும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பள்ளிகரணை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தியாகராஜன் இருவரின் உடலையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வேகமாக லாரி ஓட்டிய விழுப்புரத்தை சேர்ந்த சண்முகம் கைது செய்யப் பட்டார்.

மெரினா கடலில் பெண் பலி

சென்னை மெரினாவில் அண்ணா சமாதி பின்புறம் உள்ள கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடல் அலையில் சிக்கி இறந்தார்.

அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x