சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 33 கிலோ தங்கம் சிக்கியது
சென்னை சேப்பாக்கத்தில் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து 33 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை சேப்பாக்கம் சி.என்.கே.லேன் பகுதியை சேர்ந்தவர் தமீமுன் அன்சாரி (31). இவரது சகோதரர் ரகுமான் (27). இருவரும் இணைந்து சென்னை ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் வைத்துள்ளனர். இவர்களின் வீட்டில் செவ்வாய்க்கிழமை காலையில் மாவட்ட வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 9 பேர் திடீர் சோதனை நடத்தினர்.
3 மாடிகளைக் கொண்ட வீட்டின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை கண்டுபிடித்தனர். அதனை திறந்து பார்த்தபோது உள்ளே 33 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. ஆனால் இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. எனவே தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமீமுன் அன்சாரி, ரகுமான் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த தங்கக் கட்டிகள் இலங்கையில் இருந்து படகில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து காரில் சென்னைக்கு எடுத்து வரப்பட்டதாகவும் கூறப்படு கிறது.
இவற்றை எதற்காக பதுக்கி வைத்திருந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
