நீதிமன்ற வாசலில் போலீஸாருடன் மோதல்: வழக்கறிஞர்கள் 9 பேர் மீது வழக்கு - ராஜினாமா செய்ய முயன்ற இளைஞர் காவல்படை வீரர்களால் பரபரப்பு
திருச்சியில் நேற்று முன்தினம் நீதி மன்ற வாசலில் இளைஞர் காவல் படை வீரரைத் தாக்கியதுடன் போலீ ஸாருடன் மோதலில் ஈடுபட்ட சம்ப வத்தில் வழக்கறிஞர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாததால் பணியை ராஜினாமா செய்ய முயன்ற இளைஞர் காவல்படை வீரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் திருச்சி கோட்டை பகுதியில் ஒரு வீட்டில் திருட முயன்ற குணா என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குணாவின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர்.
சில தினங்களுக்கு முன்பு ஜாமீ னில் வெளிவந்த குணா, தன்னை போலீஸில் ஒப்படைத்த அந்த தெரு வாசிகளிடம் சில ரவுடிகளுடன் சென்று ரகளை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பயந்துபோன அந்த தெரு மக்கள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யவே, போலீஸார் குணாவின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குணா, அவரது வக்கீல் ராஜேந்திரகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர்.
வழக்கறிஞரை கைது செய்ய போலீஸார் முயற்சிப்பதை அறிந்த திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள், போலீஸாரைக் கண்டித்து நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது உண்ணாவிரதப் பந்தல் அருகே கன்டோன்மென்ட் உதவி ஆணையர் கணேசன் வந்த ஜீப் ஓட்டுநர் இளைஞர் காவல்படையைச் சேர்ந்த திலீப் வழிவிடச் சொல்லி ஹார்ன் ஒலி எழுப்பியுள்ளார். இதனால் போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை மூத்த வழக்கறிஞர்கள் சமாதானம் செய்து, ஜீப்பை அனுப்பி வைத்தனர்.
சிறிது நேரம் கழித்து சீருடையை மாற்றிக்கொண்டு உண்ணாவிரதப் பந்தல் பக்கம் வந்த உதவி ஆணையரின் ஜீப் ஓட்டுநர் திலீப்பை, ஆத்திரத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் சுற்றி வளைத்து கீழே தள்ளி செருப்பு, பெல்ட் ஆகியவற்றால் தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.
இத்தகவலை அறிந்த இளைஞர் காவல்படையினர், பணியில் இருந்து தாங்கள் விலகப் போவதாகக் கூறி நேற்று காலை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே ஒன்றுகூடினர். ராஜினாமா கடிதம் எழுதியதுடன் அதை மாநகர காவல் ஆணையரிடம் வழங்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.
இதனையறிந்த கன்டோன் மென்ட் குற்றப்பிரிவு உதவி ஆணையர் அருள் அமரன், அவர் களை சமாதானப்படுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத் துக்கு அழைத்துச் சென்றார். தங்க ளுக்கு பணிப்பாதுகாப்பு இல்லை. எனவே, பணியை ராஜினாமா செய்கிறோம் என இளைஞர் காவல்படையைச் சேர்ந்த 54 பேர், ஆணையரிடம் தெரிவித்தனர்.
“உங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். பணி விலகும் முடிவைக் கைவிடுங்கள்” எனக்கூறி சமாதானப்படுத்தி ஆணையர் சைலேஷ்குமார் அவர் களை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே இளைஞர் காவல்படை வீரரை பணி செய்ய விடாமல் தடுத்து அடித்துக் காயப் படுத்தியதாக வழக்கறிஞர்கள் பொன்.முருகேசன், முத்துக் குமார், சரவணன், பாலமுருகன், செல்வக்குமார், ஆனந்த், ராஜ் குமார், பூபாலன், சுப்பிரமணியன் ஆகிய 9 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர்களை தாக்கிய இளைஞர் காவல்படை வீரர் திலக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதி உத்திராபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து கேட்க முயன்றபோது, ஆணையர், போலீஸார் மற்றும் இளைஞர் காவல்படையினர் என யாரும் எதுவும் கூற முன்வரவில்லை.
உயர் நீதிமன்ற பரிந்துரை என்ன ஆனது?
திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மார்ட்டின் கூறியதாவது: வழக்கறிஞர்கள் - போலீஸார் இடையே ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் பேசி சரிசெய்துகொள்ள மாவட்டந்தோறும் மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதி, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அதுபோன்ற குழு திருச்சியில் இதுவரை அமைக்கப்படாததால் வழக்கறிஞர்கள்- போலீஸார் இடையே ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் பேசி சரிசெய்யும் வாய்ப்பு இல்லை. இக்குழுவை உடனே அமைத்து பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க காவல்துறையினர் முன்வர வேண்டும்” என்றார்.
