Published : 10 Dec 2014 10:22 AM
Last Updated : 10 Dec 2014 10:22 AM

புதுச்சேரியில் 3 நாள் தேசிய நூலக மாநாடு: வீடுகளில் நூலகங்களை அமைக்க வேண்டும் - தொடக்க விழாவில் அப்துல் கலாம் வலியுறுத்தல்

டெல்லியில் உள்ள டெல்நெட் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம் ஆகியவை சார்பாக, புதுச்சேரியில் 17-வது தேசிய நூலக மாநாடு நேற்று தொடங்கியது.

அறிவு வளர்ச்சி, நூலகவியல் மற்றும் தகவல் கட்டமைப்பு என்ற தலைப்பில் 3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரெஞ்சு ஆய்வு நிறுவன முதன்மை நூலகர் அனுரூபா நாயக் வரவேற்றார். டெல்நெட் இயக்குநர் எச்.கே.கவுல் அறிமுகவுரை ஆற்றினார். பிரெஞ்சு ஆய்வு நிறுவன இயக்குநர் பியரி கிராட் சிறப்புரையாற்றினார். மாநாட்டை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

நூல்களை விலைக்கு வாங்கித் தான் படிப்பேன். 1950-ம் ஆண்டு களில் நான் பயிலும்போது, மூர்மார்க்கெட் பகுதி தான் எனக்கு மிகவும் பிடித்த இடமாக விளங்கியது. அங்கு வாங்கிப் படித்த புத்தகங்கள் எனது வாழ்வில் உந்து சக்தியாக விளங்கின. டெல்நெட்டில் 20 லட்சம் புத்தகங்கள் உள்ளன. சமூக வலைதளங்களில் புத்தகங்களின் முக்கிய கருத்துகளை எளிதாக அறியும் வகையில் வெளியிடுவது அவசியம். நூலகங்களும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்வது அவசியம். டுவிட்டரில் என்னை 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். எனது கருத்துகள் அவர்களை சென்றடைவதோடு, அவர்களின் கருத்தையும் அறிய முடிகிறது.

இந்தியாவில் 80 கோடி பேர் செல்போன்களை பயன் படுத்துகின்றனர். செல்போன்களி லேயே நூலக வசதியை ஏற் படுத்தலாம். இதற்கான தொழில் நுட்ப வசதியும் உள்ளது. நூல் களை மொழிமாற்ற வசதியுடன் படிக்கும் தொழில்நுட்பத்தை செல் போன்களில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நவீன யுகத்திலும் நூல்களை வாசிக்கும் பழக்கம் குறையாமல் இருக்கும். தற் போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப அனைத்து நூலகங்களையும் கணினிமயமாக்கி டிஜிட்டல் மயமாக்குவது அவசியம். ஒவ் வொரு பெற்றோரும் தங்கள் வீடு களில் 20 முதல் 30 நூல்களைக் கொண்ட சிறிய நூலகங்களை ஏற்படுத்தி தினமும் 1 மணி நேரமாவது வாசித்தால் தானா கவே குழந்தைகளுக்கும் வாசிக்கும் பழக்கம் உருவாகும். புத்தகங்கள்தான் ஒருவரை முழு மனிதாக மாற்றும். இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சங்கீதா கவுல் தொகுப்புரை ஆற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவில் இருந்து நூலகத்துறை நிபுணர்கள், நூலகர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

நூலகர் கல்யாணசுந்தரத்துக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் தேசிய நூலக மாநாடு தொடங்குவது குறித்த தகவலை பத்திரிகைகளில் பார்த்து, அதில் கலந்து கொள் வதற்காக நூலகர் கல்யாண சுந்தரம் வந்திருந்தார். அவர், ஏற்கெனவே தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த நூலகர் விருது வென்றவர். தனது மாத ஊதியம், ஓய்வூதிய தொகை, பரிசு தொகை என அனைத்தையுமே தானமாக அளித்தவர்.

மாநாடு நடைபெறும் பகுதிக்கு நேற்று வந்த கல்யாணசுந்தரத்துக்கு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அனுமதி தர வில்லை. பின்னர், தான் நூலகர் என்பதையும் தன்னைப்பற்றியும் அவர் விளக்கிக் கூறிய பிறகு முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டார்.

இதையடுத்து, மாநாடு தொடங் கியதும் அரங்குக்கு அப்துல் கலாம் வந்தார். அவருக்கு விழா ஏற்பட்டாளர்கள் பூங்கொத்து அளித்தனர். அப்போது, முதல் வரிசையில் இருந்த கல்யாண சுந்தரத்தை அப்துல் கலாம் அழைத்து தனக்கு அளித்த அந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்து கவுரவித்தார்.

இது குறித்து, ‘தி இந்து’விடம் கல்யாணசுந்தரம் கூறும்போது, “நூலகம் தொடர்பான மாநாடு என்பதால் வந்தேன். எனக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டம், நூலக துறைக்கு நோபல் பரிசு இருந்தால் அதை பெற எனக்கு தகுதி இருப்பதாக வழங்கிய குறிப்பு ஆகியவை பற்றி என்னுடன் வந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல் வரிசையில் அமர வைத்தனர். கலாம் வந்ததும் என்னை பார்த்து கையை காட்டி நலம் விசாரித்தார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x